பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன. தத்துவர்களிடையே ஏற்பட்ட போட்டியில் கடவுளர் முதன்மைப் படுத்தப்பட்டுப் புனைவுக் கதைகள்-புராணங்களும் தோன்றிய பிறகு சமயக் காழ்ப்புகளும் கலகங்களும் தோன்றலாயின. கடவுள் நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்கும் சமயங்களின் சார்பு போதும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாங்குவாழ்வதில் ஆர்வம் காட்டினர்; தொல்காப்பியப் பொருளதிகாரத் தோற்றம் இதற்குச் சான்று. தமிழர்களின் கடவுள் நம்பிக்கையும் சமயச் சார்பும் தொன்மையானவை. தனித்தன்மையுடையவை.

“சைவசித்தாந்தம் என்னும் தத்துவக் கொள்கையானது மிக விரிந்ததும் பெருஞ் செல்வாக்குடையதும், ஐயத்திற்கு இடமின்றி உண்மையிலேயே பெருமதிப்பிற்கு உரியதும் இந்திய நாட்டிலுள்ள சமயக் கொள்கைகளுக்கெல்லாம் தலைசிறந்ததுமாகும். தென்னிந்திய மக்களின் மிகச்சிறந்த பேரறிவின் பெருவிளைவே சைவசித்தாந்தமாகும்” என்று டாக்டர் ஜி. யு. போப் எழுதியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

தமிழர்களின் சமயச்சார்பு ஆரியச் சார்புடையதன்று; சமஸ்கிருதச் சார்புடையதுமன்று. தமிழர்களின் அறிவியல் தெளிவில் முகிழ்த்ததே தமிழர் சமயம். தமிழர் வாழ்வில் கடவுள் நம்பிக்கை, வழிபாடு, சமயம், தத்துவஇயல் புராணங்கள் ஆகியவை படிமுறையிலேயே வளர்ந்து வந்துள்ளன. தமிழர்கள் எந்த ஒரு மொழியையோ சமயத்தையோ வெறுத்ததில்லை. அதே போழ்து தனித்தன்மையைத் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளனர். அதனாலேயே ‘ஆரியம் நன்று தமிழ் தீது’ என்றவர்கள் ஒறுத்து ஒதுக்கப்பட்டனர்.

தமிழர் சமயம் தெளிவான கொள்கையுடையது! தமிழர் சமயத்தில் இயல்பாகவே தத்துவியல் தெளிவு