பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

233


இருக்கிறது. நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் இசைந்தது தமிழர் சமயம். பொருள்கள் இயல்பாக உள்ளவை என்பது தமிழர் சமயத்தின் அடிப்படை. முதலாவது கடவுள். இரண்டாவது உயிர்கள். மூன்றாவது உயிர்களைப் படைக்கவில்லை என்ற உண்மையைத் தமிழர் சமயமே-சிவநெறியே கூறுகிறது. கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்ற ஒரு கொள்கை யளவிலேயே உலகின் நுற்றுக்கணக்கான சிக்கல்களுக்கு எளிதான தீர்வு காணமுடிகிறது. அதுமட்டுமன்று வாழ்வின் பொறுப்பு மானுடத்தினுடையதாகிறது. இயல்பாக ஆணவத் தொடர்புடைய ஆன்மா, ஆணவத்தின் கொட்டத்தை அடக்கச் சிந்தனையிலும் செயலிலும் அறிவார்ந்த நிலையில் வளர்ந்து இறைவனின் இன்ப அன்பியலைச் சார்தலே தமிழர் சமயக் கொள்கையின் சாரம். இந்த அடிப்படையில் தோன்றிய சமயத்திற்கு-தத்துவம் சார்ந்த சமயத்திற்குப் பெயர் சைவசித்தாந்தம். தத்துவ உலகத்தில் இக்கொள்கையே முடிந்த முடிபாகக் கருதப்படுகிறது.

சைவ சமயம், வைணவ சமயம் இரண்டும் தமிழர்களின் பழைய சமயங்கள். சைவ சமயத்தின் கொள்கைகள் தொல்காப்பியம் மற்றும் சங்க நுல்களில் சிறப்பாகப் பேசப்பெற்றுள்ளன.

"பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்றொருவன் போல
மன்னுக பெரும நீயே!"

(புறம் 61; 5-7)

"மணி மிடற்றொருவன்” என்ற இந்தச் சொற்றொடர் இறைவனின் இறவா நிலையையும் உயிர்கள் மாட்டுள்ள கருணையையும் புலப்படுத்துகிறது.

:"தீதும் நன்றும் பிறர்தர வாரா"

(புறம் 192:2)

கு.X11-16.