பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

239


ஏடுகளில் அதிகமான இடத்தைப் பிடித்துள்ளன என்பதை மறுப்பார் யார்? வரலாற்றுக் காலந்தொட்டு சற்றேறக் குறைய 5000போர்கள் நடந்துள்ளன. இந்தப் போர்களால் ஏற்பட்ட அழிவுகள் பல நூறு தலைமுறைகளின் வாழ்வுக்கு ஆக்கம் தரத்தக்கன என்று எண்ணும் பொழுது கண்கள் குளமாகின்றன. இன்றும் மனிதன் நெருக்கடிகளுக் கிடையிலேயே வாழ்கிறான். களவும் காவலுமே இன்றைய வாழ்வின் கட்டாயம். இன்றளவும் தருமம் இளைத்தே வந்து கொண்டிருக்கிறது. சூதுகளே வெற்றி பெற்றுள்ளன; வெற்றி பெறுகின்றன.

இந்தச் சூழ்நிலைகளால் எய்த்துக் களைத்துப் போன மக்கள் ஒழுங்குகள், ஒழுக்க நெறிகள், ஒழுக்க நெறிகளைச் சார்ந்த அமைதி, துன்பச் சூழலுக்கு அப்பாலுமுள்ள உலக இயக்கம் ஆகியவற்றை உற்றுப் பார்த்தனர். வியத்தகு நிகழ்ச்சிகள், சிந்தனை எல்லைக்கும் அப்பாற்பட்ட ஒழுங்குகள், முறை பிறழாத நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதைக் கண்டனர். இத்தகைய வியத்தகு அமைப்புக் காரணம் கடவுளைத் தவிர வேறு யாராக இருக்கக் கூடும் என்று எண்ணினர். கடவுள் நம்பிக்கை தோன்றியது. கடவுள் நம்பிக்கை, சமநெறி, தன்னலத்துறவு, பிறர் நலம் பேணல் ஆகிய அறநெறி சார்ந்த வாழ்க்கையை நாடிய மக்கள், தம்மைத் தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய தனித் துணையை நாடினர். அங்ஙனம் தேடி உணர்ந்த தலைமையே கடவுள். அக்கடவுள் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது, நன்றுடையான், தீயதில்லான்; இன்பன்; துன்பமில்லாதவன்.

மக்கள் கடவுள் நம்பிக்கையில் வாழத் தலைப்பட்ட பிறகு, நெறிமுறைகள் தோன்றின. நெறிமுறைகள் சமயங்களாக உருப்பெற்றன. சமயநெறிகள் வாழ்வியலைத் தழுவியனவாக இயக்க நிலையில் இருந்த வரையில் மனிதகுலம் அதிகப் பயன் பெற்றது. பின் காலப்போக்கில், சமயங்கள் நிறுவனங்களான பிறகு, அவற்றின் உயிர்ப்பாக இலங்கிய மனித நேயமும் தொண்டும் அளவால்