பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லை. இந்தியாவில் தோன்றி வளர்ந்த சமயங்கள் பலப்பல. இவையெல்லாவற்றையும் தனித்தனியே குறிப்பிட இயலாத இசுலாமிய அரசு, இந்தியாவில் தோன்றிய சமயங்களை யெல்லாம் இந்து சமயம் என்று சொல்லிவிட்டது. ஆங்கிலேய அரசும் இந்த நடைமுறையை மேற்கொண்டது. இந்தியன் என்ற பெயரைப்போல இந்து என்பதும் பொதுப் பெயரே. இந்து என்ற ஒரு பெயர் எந்தச் சமயத்தையும் குறிக்காது; குறிக்க இயலாது. இந்திய மண்ணில் தோன்றிய சமயங்கள் நூற்றுக்கணக்கானவை. அவற்றுள் ஒவ்வொரு சமயத்திற்குள்ளும் உட்பிரிவுகள் ஏராளம். இந்தியாவில் தலைசிறந்த சமயங்கள் இரண்டு. ஒன்று வைணவம்; பிறிதொன்று சைவம். வைணவத்தின் பிரிவுகள் 2; சைவத்தின் பிரிவுகள் 6 என்பது மரபு. இவை அகச் சமயங்கள், பின் அகப்புறச் சமயங்கள், புறச் சமயங்கள், புறப்புறச் சமயங்கள் என்றெல்லாம் சாத்திரங்கள் கூறுகின்றன. இந்தச் சமயங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் நுண்ணிய அனுபவங்களின் வழிவந்தவை. இந்து சமயங்களில் ஒன்று சித்தாந்தம் சைவசித்தாந்தம் என்று கூறுவர்.

சைவசித்தாந்தச் சமயச் சிந்தனைகள் தோன்றிப் பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. “இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மேம்பட்டது என்பதில் ஐயமில்லை” என்றார் ஜி. யூ. போப். செளடி பாதிரிப் பெருமகனாரும் “சைவசித்தாந்தம் இந்தியச் சிந்தனைகளினதும் உணர்வினதும் சிகரம்” என்று புகழ்ந்துள்ளார். ஆயினும் தத்துவ விளக்க அடிப்படையில் முதன் முதலாக ஒரு முழுச் சொல் தோன்றியது 13ஆம் நூற்றாண்டில்தான். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்மப் பல்லவன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் “நான் ஒரு சைவசித்தாந்த” என்ற வசனம் காணப்படுவதாகத் தெரிகிறது. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய மெய்கண்டார்தான் இதனைச் சிவஞான போத நூல் மூலம் முறைப்படுத்தினார்.