பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

243


தமிழகம் பல்வேறு சமயத் தாக்கங்களுக்கு ஆளாக நேரிட்டதை உணர்ந்த மெய்கண்டார், சமயங்களின் தத்துவக் கலப்பு ஏற்படாமல் தடுத்துப் பாதுகாக்கவே ‘சிவஞான போதம்’ இயற்றினார். அப்படியிருந்தும் சைவத்தில் ஸ்மார்த்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டது.

சைவசித்தாந்த சமயம் தெளிவான அடிப்படையுடையது; நம்பிக்கைக்குரியது; நல்வாழ்க்கைக்குரியது; மனிதகுலச் சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் தெளிவான தீர்வு காட்டுவது, சைவசித்தாந்த சமயம் மூன்று பொருள்கள் என்றும் உள்ளவை என்று அறுதியிட்டுக் கூறுகிறது. அவையாவன முறையே, இறை, உயிர், தளை என்பன. இவற்றைப் பதி, பசு, பாசம் என்றும் கூறுவர். உலகின் பல்வேறு சமயங்கள் கடவுளுண்மையில் வேறுபட்டதைப் போலவே கடவுள் ஆன்மா என்ற இடங்களிலும் வேறுபடுகின்றன; பல சமயங்கள், கடவுள் ஆன்மாவைப் படைத்தன என்று கூறுகின்றன. இந்து சமயத்தின் உட்பிரிவிலேயே ‘நானே கடவுள்’ என்று கூறும் ஒரு சமயமும் உண்டு. இவையெல்லாம் வாழ்வியலை ஆராய்ந்தறிந்தால் மெய்ப் பொருளறிவுத் துறையில் தத்துவத் தெளிவில் நிற்றல் அரிது. கடவுள் உயிர்களைப் படைத்தார் என்ற கொள்கை நிலைபெறல் யாங்ஙனம்? கடவுள் பூரணப் பொருள். கடவுள் உயிர்களைப் படைத்திருந்தால் உயிர்களுக்கு அறியாமை எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்ற வினாக்களுக்கு விடை கூறவேண்டிவரும். செழுந்தமிழ் வழக்காகிய சைவசித்தாந்த மரபுப்படி கடவுள் ஒருவர். அவர் ஞானத்தின் வடிவம்; போற்றல் உடையவர், உயிர்கள்பால் கருணை கொண்டவர்; ஆணவத்தில் கிடந்த உயிருக்கு அறிகருவிகளையும் செயற் கருவிகளையும் பொருத்தி உபகரித்து நுகர்பொருள்களையும் அளித்து வாழ்க்கையில் ஈடுபடுத்துகிறார்.

சித்தாந்தச் செந்நெறியில் கடவுள் சிவம் என்று அழைக்கப்படுகிறார். சிவத்தோடு சம்பந்தம் உடையது சைவ