பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பார்வையிலிருந்து தப்பாது மறையாது. ஆனால் ஆணவம் உயிர்களின் அறிவையும் மறைக்கிறது. தன்னையும் மறைத்துக் கொள்கிறது. ஆதலால் மறைவாக இருந்து துன்பம் செய்யும் ஆணவமே கொடிது.

ஆணவம் இயல்பாகவே உயிரைப்பற்றி நிற்பது. உயிர்கள்மீது ஆணவத்தின் தாக்கம் இருக்கும் பொழுது, உயிர் அறிவு இழந்து சிறுமையுற்று முடங்கிக் கிடக்கிறது. முடங்கிய நிலையிலிருக்கிறது உயிர் கடவுட் சார்பை உணர்ந்து, கடவுளைச் சார்ந்து ஒழுகத் தலைப்படும்பொழுது ஆணவம் செயலற்று விடுகிறது, ஒளியின் முன்னே இருள் செயலற்றுப் போவது போல.

உயிர் கடவுட் சார்புணர்ந்த நிலையில், கடவுளை கடவுளின் திருவடிகளை நெஞ்சத்தில் வைத்து வழிபாடு செய்ய-நிலையான உறவுகொள்ள விரும்பிய விருப்பத்தின் விளைவாகவே கடவுள் திருவுருவங்கள் பலப்பல கொண்டருளினான். திருவுருவ வழிபாடு தொடங்கிய நிலையில் மக்கள் கூடிவாழத் தலைப்பட்டனர். ஊர்கள் தோன்றின. வீதிகள் நடுவே திருக்கோயில்கள் எழுந்தன. திருக்கோயிலை மையமாகக் கொண்டு சமுதாயம் வாழத் தொடங்கியது. திருக்கோயில் வழிபாட்டினைச் சிறப்புற நிகழ்த்த விரும்பிய விருப்பத்தின் விளைவாகப் பூசிக்கும் முறைகள் அடங்கிய சிவாகமங்கள் தோன்றின. சிவாகமங்கள் சிவசக்தி அருளியது என்ற நம்பிக்கை உண்டு. சிவாகமங்கள் இறைவனை நமக்கு எளிதில் அனுபவிக்கத் தருவன. நமது மூதாதையரில் சிலர் தம்மைச் சிவ வழிபாட்டுக்கென்றே அர்ப்பணித்துக்கொண்டு முப்போதும் திருமேனி தீண்டுபவர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் சிவாச்சாரியார்கள். அவர்கள் உயிர்களுக்கு மேகம்போல் நின்று விளங்கி உதவி செய்பவர்கள். திருக்கோயில் வழிபாட்டுடன் சிற்பம், இசை முதலிய அறுபத்துநான்கு கலைகளும் வளர்ந்தன. இத்தகு சிவநெறியை ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை பேணிக்காத்தனர் திருமுறை ஆசிரியர்கள். இன்றளவும்