பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிகழ்ச்சிகளே! ஆயினும் இவை மக்களின் பேரால் மத பீடங்கள் நடத்தியவையாகும். இவை சமயச்சார்பற்று ஒழுகத் தெரியாத அரசுகள் நடத்தியவை. மதத் தத்துவங்களுக்கும் இந்தப் போர்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை. ஆனால் பழியைச் சுமந்துகொண்டவை மதங்களே யாகும். பல சமயங்களில், அரசுகள் சமயச் சார்பின்மையை நடுநிலையை விட்டுப் பிறழ்ந்து, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து நலம் செய்ய மறந்துள்ளன. சாதி, மதம், கட்சிகள் பார்த்து, வேற்றுமை பாராட்டி, அரசுகள் நலம் செய்தவன் காரணமாகவும் மதங்களுக்கிடையே அழுக்காறும் அழுக்காற்றின் வழிப்பட்ட போட்டிகளும் வளர்கின்றன.

இன்று இந்திய அரசுகள் சாதனைகளையும் மதங்களையும் வளர்த்துக்கொண்டு வருகின்றன. இதனால் அண்மைக் காலமாக இந்தியாவில் சாதி மதச் சண்டைகள் அதிகரித்து வருகின்றன என்பதை எவரும் மறுத்தல் இயலாது. மறத்தலும் இயலாது. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்புத் தருதல் என்பது வேறு. அவர்களுக்கென்று தனிச் சலுகைகள் தருதல் என்பது வேறு. இன்று இந்தியாவில் சாதி மதச் சண்டைகள் வளர அரசுகளே காரணம் என்பதை நினைவிற்கொள்க. அரசுகளின் போக்கு மாறாதுபோனால் இந்திய ஒருமைப்பாடு நிலைகுலையும்.

மதங்களின் தோற்றம்தான் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது என்பது உண்மையே யானாலும் அந்த மதங்களுக்கிடையே ஒருமை நலம் கண்டன. மதங்கள் வேற்றுமைப் படுத்தினாலும் ஒருமை நலம் கண்டன. மதங்கள் வேற்றுமைப் படுத்தினாலும் ஒருமைப்பாட்டுக்குரிய எண்ணங்களை அறவே புறக்கணித்துவிடவில்லை. அவற்றுக்குள் ஒருமைப்பாட்டு நிலையும் காணப்படுகிறது. “மாந்த ராகிய நீங்கள் எல்லோரும் ஒரு குலத்தவரானர். உங்களைப் போற்றிப் பாதுக்காப்பவன் ஒரே ஆண்டவன்.12 என்று முகம்மதிய மதம் கூறுகிறது.