பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

259


வளர்க்கப்பெற்றது. ஆதிக்கம் செய்தோர் எல்லாருக்கும் சமவாய்ப்பு அளிக்கத் தவறியது; குறிப்பிட்ட சிலருக்கே உரியதாக அறிவுக்குத் தடை விதித்தது ஆகிய செயல் முறைகள் மதங்களுக்கிடையில் சண்டைகள் கலகங்கள் தோன்ற இடம் கொடுத்தன. அதுபோல இந்து மதம் போன்ற சில மதங்கள் ஏன்? எல்லா மதங்களுமே கூட மக்களுக்கிடையில் உயர்சாதி அமைப்பை அங்கீகரித்து அவர்களுக்கே சமூகத் தகுதிகளைக் கொடுத்து வந்ததால் ஒடுக்கப்பட்ட மக்கள் புதிய மதங்களைக் காணவும் அல்லது தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மதம் மாறவும் தலைப்பட்டனர். இன்றளவுகூட இந்து சமயத்தில் சாதிகளைச் சார்ந்த மனப்பான்மை மாறவில்லை. இனி மாறும் என்ற நம்பிக்கைகூட இல்லை. ஏன்? சாதிகளை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் கூடச் சாதிச்சேற்றில் அவர்களை அறியாமல் சிக்கிக் கொண்டு எழுந்திருக்க முடியாமல் தவிக்கின்றனர். அதுமட்டுமல்ல. பலநூறு ஆண்டுகளாக வெறுத்து ஒதுக்கப் பெற்று வந்த சாதிகள் இன்று சமூக, அரசியல் ரீதியான அங்கீகாரம் பெற்றுவிட்டன என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். இன்று மதவெறுப்பு, சாதி வெறுப்பு முதலியன மதங்களின் அடிப்படையில் தோன்றவில்லை; சமூக பொருளாதார ஆதிபத்தியங்கள் அடிப்படையிலேயே மதப் போர்வையில் நடத்தப்பெறுகின்றன. இதன் காரணமாக உரிமைப் போராட்டங்கள் என்று தொடங்கிக் காலப்போக்கில் வெறுப்பாகவும் பகையாகவும் வந்துள்ளது. உலக வரலாறு எப்படி இருந்தாலும் நமது நாடு பல்வேறு சமயங்களுக்கும் அங்கீகாரம் கொடுத்து வளர்ந்த நாடு; பேணிய நாடு, பிற்காலச் சோழ அரசன் ஆதி இராசேந்திரன் என்பவன் குறுகிய மதக் கொள்கைகளை ஆதரித்ததை மக்கள் விரும்பவில்லை. மக்கள் இதற்கு உடன்படாமல் எதிர்த்துப் போராடினார்கள். ‘கிருமி கண்ட’ என்று வெறுத்து ஒதுக்கப்பட்டான். கல்லால் அடித்துக் கொல்லப்பட்டான்