பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழில் வழிபாடு

269



தமிழில் அருச்சனை

நமது கொள்கை

உயிர்கள் துன்பத்தினின்று விடுதலை பெற்று அருளார்ந்த வாழ்வு பெறுவதே சமய வாழ்வின் விழுமிய பயன். இத்தகைய விழுமிய பயனைத் தரவல்லது வழிபாடேயாம். வழிபாடு என்பது தூய பேரருளின் வழி தன்னை வழிப்படுத்திக் கொள்வது - உயிரின் அனுபவத்துக்கு உரியதொன்று சிந்தனையைத் துாண்டிக் காதலைத்தந்து, கணிவையும் நல்கி, நெகிழ்ச்சியைக் கொடுத்து வழிபாட்டின் பயனைத் தரக்கூடியதாக வழிபாட்டு முறை அல்லது அருச்சனை இருக்க வேண்டும். தற்பொழுது உள்ள அருச்சனை முறையில் இருதயம் கலந்த வழிபாட்டுக்குப் பெரும்பாலும் இடமில்லை. தாய்மொழியில் வழிபாடு அல்லது அருச்சனை செய்தால், அவ்வழிபாடு இருதயம் கலந்ததாக, விழுமிய பயனைத் தரக்கூடியதாக இருக்குமென்று நம்புகின்றோம். ஆதலால், தமிழகத் திருக்கோயில்களில் விரும்பினால், தமிழிலும் அருச்சனை செய்ய வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது நமது கொள்கை அதுபோலவே, தற்பொழுது இருந்து வருவது போலவே வடமொழியிலும் வழிபாடு அல்லது அருச்சனை நடத்தலாம். அது போலவே பிறமொழிகளிலும் செய்யலாம் என்பதே நமது கொள்கை. இக்கொள்கை மொழி வழியாகத் தோன்றியதல்ல. வழிபாட்டின் முழுப்பயனைத் தரவேண்டுமென்ற கருத்துவழித் தோன்றியதேயாம் என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகிறோம்.

கொள்கைக்கு அரண் செய்கின்ற கருத்துக்கள்

1. எந்த இனத்திற்கும் அவற்றின் தாய்மொழிவழியே சமயம்தோன்றி வளர்ந்து வாழ்வளிக்குமே தவிர பிறமொழி வழியல்ல என்பது வரலாற்று நூல் முடிபு.