பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/282

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


2. வழிபாட்டிற்குச் சிந்தனையே அடிப்படை. பெருபான்மையோர்க்குத் தாய்மொழிவழியே சிந்தனை தோன்றிச் சிறக்குமென்றால், வழிபாட்டிற்குத் தாய் மொழியின் தேவையைச் சொல்லவும் வேண்டுமோ?

3. ஒரு கால், அறிஞரானோர் சிலருக்குப் பிற மொழியில் சிந்திக்க முடியுமானால், அக்கருத்து உணர்வைத் தொடுவதில்லை. வழிபாட்டுக்கு உணர்வே உயிர்நாடி, உணர்வைத் தொட்டுப் பெருகிய அன்பினராக உருகி, வழிபாடு செய்யத் தாய்மொழியின் மூலமே முடியும்.

4. வழிபாட்டிற்குக் காதல், கனிவு, கசிவு இவ்வுணர்வுகளின் வழிப்பட்ட நெகிழ்ச்சி தேவை. இவ்வுணர்வுகளை, மெய்ப்பாடுகளை ஒருவர் தாய்மொழியிலேயே பெறமுடியும் என்பதால் தாய்மொழியில் வழிபாடு அவசியம்.

5. வழிபாடு என்பது உயிரைத் தூய அருளார்ந்த அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்ற சாதனம். எந்த உயிர் அனுபவத்தை விரும்புகிறதோ அந்த உயர் மனம் கரைந்து கசிந்து வழிபாடு செய்ய வேண்டும். தூய்மையாக்கப்பட வேண்டிய பாத்திரத்தைத் தேய்த்தாலே பாத்திரம் தூய்மையாகும். உழுது பண்படுத்த வேண்டிய நிலத்தை உழுதாலேயே நிலம் பண்படும். அதுபோலவே, அனுபவ நிலையினின்றும் விலகியே, அருளார்ந்த அனுபவத்தைப் பெற வேண்டிய உயிர்களின் உணர்வை, வழிபாடு தொட்டு அவ்வுயிரின் புலன்களை ஞான ஏர்கொண்டு உழுதாலேயே அவ்வுயிர் திருவருளைப் பெறமுடியும். அதற்குத் தாய்மொழியே சாதனமெனக் கூறவும் வேண்டுமோ?

6. வழிபாடு அல்லது அருச்சனை என்பது ஓர் உயிர் இறைவனை நோக்கி அழுகின்ற அழுகையேயாகும். எவ்லோர்க்கும் தாய்மொழியில்தான் அழமுடியுமே தவிரப் பிற மொழியிலும் அழ முடியுமோ?