பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழில் வழிபாடு

271



7. மந்திரங்களுக்கும், மறைகளுக்கும் மொழி வரையறை கிடையாது. நிறைமொழி மாந்தர்கள் (ஞானிகள்) அருளிச் செய்தனவெல்லாம் பொருளும் பயனும் நோக்கி மறைகளும் மந்திரங்களுமாகும்.

8. உலகில் எல்லா மொழிகளிலும் எல்லாச் சமயங்களிலும் மறைகளும் மந்திரங்களும் பழக்கத்தில் இருந்து வருகின்றன.

10. தமிழில் மந்திரங்கள் இருந்தன, இருக்கின்றன என்பதைத் தொல்காப்பியம்-திருக்குறள்-காஞ்சிப் புராணம் - திருமுறை கண்ட புராணம்-திருமந்திரம் முதலிய நூல்களின் வழியறிந்து உணர முடிகிறது. தமிழகத் திருக்கோயில்கள் பலவற்றிற்குத் திருவருட் பொலிவும் (சாநித்தியம்) பெருமையும், சைவ நாயன்மார்களின் திருப்பாடல்களாலும், ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களாலேயுமாம் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியானால் அப்பாடல்களால் பெருமைபெற்ற திருத்தலங்களில் பாடல்களை ஓதி அருச்சனை செய்வதில் தவறென்ன?

11. கன்று பசியினால் தாய்ப்பசுவின் மடியை முட்டும்போது பால் சுரக்கும். கன்றாக முட்டாத போது நாம் பிடித்து முட்டச் செய்தாலும் பால் சுரக்கும். இறைவன் நாயன்மார்களின், ஆழ்வார்களின் பாடல்கேட்டு மகிழ்ந்து திருவுருவங்களை இடமாகக்கொண்டு வீற்றிருந்தருளி அருள் வழங்கினார். அதே பாடல்களை இன்று நாம் மனம் கலந்த அன்பினராக ஓதி அருச்சனை செய்தால் திருவருள் அனுபவம் எளிதில் கிடைக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

12. அருச்சனை என்பது இறைவனைப் புகழ்ந்து போற்றித் துதி செய்தலேயாகும். தாய்மொழியில் போற்றிப் புகழ்வதே எளிது. இறைவன் உலகத் தலைவன். எல்லா உயிர்களுக்கும் தலைவன். எல்லாச் சமயங்களுக்கும் தலைவன்.