பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மதம் கடவுளுக்காகத் தோன்றியதன்று. மதத்தின் மையம் கடவுள் உணர்வேயாம். ஆனாலும், மதம் மனிதனை, அறிவால், உணர்வால் வளர்த்துக் கடவுள் தன்மை யுடையவனாய் ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டது. மனிதன் தனமையினால் விலங்குமல்லன்; ஆனால் மனிதனுமல்லன.

மனிதன் தன்னிடம் இயல்பாய் அமைந்துள்ள விலங்குத் தன்மைகளினின்று விலகி மனிதத் தன்மைகளைப் பெற்று வளர்ந்து பின் தெய்வத் தன்மைகளையும் பெற்று விளங்குதல் வேண்டும்.

விலங்குத் தன்மையாவது, இன்ப துன்ப உணர்வுகளுக்கு அடங்கி ஆட்பட்டு அழிதல், மனிதத் தன்மையாவது இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டு-ஆயினும் எதிர்த்துப் போராடித் துன்பங்களில் மட்டும் வெற்றி பெற்று இன்பமாக்கிக் கொள்ளுதல், தெய்வத் தன்மையாவது இன்ப துன்ப உணர்வுகளை வெற்றி பெற்று, உணர்வுகளைக் கடந்த-என்றும் எப்பொழுதும் துன்பம் தலைகாட்டாத இன்ப அன்பில் திளைத்து, இன்புற்று, மகிழ்ந்து வாழ்தலில் வெளிப்படுவது. இஃதே மதத்தின் குறிக்கோள். இந்தக் குறிக்கோளுக்கும் இன்றைய மதத்திற்கும் நெடுந்தொலைவு ஏற்பட்டிருப்பதை நாமனைவரும் உணர வேண்டும்.

பலநூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தின் ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர், ஓருலகம் பற்றிப் பேசினர். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்கிறது புறநானூறு: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறது வள்ளுவம். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்கிறது திருமந்திரம்.

இங்ஙனம் மனித உலகத்தை ஓருலகமாக எடுத்துக் கூறிய தமிழக மதச்சூழலின் குரலும். தமிழக மதநெறியின் ஒழுக்கமும் உடனடியாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். இறைவழிபாட்டிற்குச் சாதி முறைகள் குறுக்கே