பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/336

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசுகள் நிலைபெற்றன அல்ல. அதனால் அறிவில், அன்பில், அருளில் வைத்து வாழ்வியலை அரவணைத்து ஆற்றுப்படுத்திக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். காலத்தின் படிப்பினைகளை அலட்சியம் செய்யக்கூடாது. ஒரு சிலர் வாழ்வது இருபதாம் நூற்றாண்டில், ஆனால் அவர்களுடைய சிந்தனை கற்காலத்தில் இருக்கிறது. இத்தகையோர் தீண்டாமைக்கு நியாயம் கற்பிப்பர். சாதி வேற்றுமைகளுக்குச் சாத்திரம் காட்டுவர். உழவர் பெருங்குடி மக்கள் உயர்வதை ஏற்கும் மனம் இருக்காது. அவர்கள் மற்றவர்களைப்போல் உடுத்துதலைக்கூட விரும்பமாட்டார்கள். ஆனால் இவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்பவர்கள். இல்லை-இல்லை; அவர்களுடைய உடல் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறது. அவர்களுடைய உணர்வுகள் வழி, கற்காலத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் காலத்தை வென்றவர்கள் அல்லர், வெல்லவும் மாட்டார்கள்.

நம்முடைய மொழி, காலத்தை வென்று விளங்க வேண்டும். நம்முடைய இனம், காலத்தை வென்று விளங்கவேண்டும். நம்முடைய சமயம், காலத்தை வென்று விளங்க வேண்டும். இவையே இதுவரையில் நம்மை இயக்கிய உந்து சக்திகள்.

நம்முடைய மொழி, செழித்து வளரவேண்டும். புத்தம் புதிய கலைகளைப் பெற்று விளங்கவேண்டும். அன்றாடம் நம்முடைய வாழ்வைத் துண்டி வளர்க்கும் புத்தம் புதிய சிந்தனையை வாரி வழங்குவதாக விளங்க வேண்டும். அன்னைமொழி, உலக மொழியாக விளங்க வேண்டும். உலகம் அதற்கு உரிமையாக வேண்டும், தமிழன்னை பெற்றிருக்கும் எண்ணற்ற இலக்கியச் செல்வங்கள் உலகோர்க்குப் பொதுமையாக வேண்டும். இதுவே நமது விழைவு.

மனிதகுலம் ஒன்றேயாகும். அதில் நமக்கு எட்டுணையும் ஐயமில்லை. மனிதகுலத்தை ஒரு குலமாகக்