பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/347

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

335


“வறுமையாம் சிறுமை தப்பி”

என்று அருணந்தி சிவமும் கூறினர்.

ஆதலால், அறிவியலும் ஆன்மிகமும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. அறிவியலையும் ஆன்மிகத்தையும் நெறி முறைப்படுத்தி வையகம் சிறக்க வாழ்ந்திடுதல் வேண்டும். ஆன்மிகத்திற்குக் துணை செய்வதற்கே அறிவியல். அறிவியல், ஆன்மிகத்தைச் சார்ந்தும். ஆன்மிகத்திற்கு அரண் செய்வதாகவும் இருக்குமானால் ஆக்கவழிப் பட்டதாக இருக்கும். ஆன்மிகம், அறிவியலைத் தழுவி முறையாகப் பயன்படுத்துமானால் மண்ணை விண்ணகமாக்கும்!

17–3–86


வழிபாட்டில் ஒருமைப்பாடு

மனம், ஒரிடத்தில் நிலைத்து நிற்கும் இயல்பு டையதன்று சலிக்கும் தன்மையுடையது; சென்ற சென்ற இடங்களில் எல்லாம் தங்கும் இயல்பினது. அதன் காரணமாக மனத்தின் ஆற்றல் கெடுகிறது. அவ்வழி ஆன்மாவின் வலிமையும் குறைகிறது. இங்ஙனம் அலைந்து திரியும் மனத்தை ஓரிடத்தில் நிற்கச் செய்தல் நல்ல முயற்சி. ஒருநிலை நிற்கும் மனம் ஆற்றலைத் தரும்; அறிவை வளர்க்கும்; எண்ணற்ற பயன்களைச் சேர்க்கும். இந்த நோக்கத்திலேயே வழிபாட்டுமுறை தோன்றியது.

இறைவனை வழிபடுதல் என்பதை, இறைவனுக்குச் செய்கின்ற ஒரு கடமையாகக் கருதுதல் கூடாது. வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன், வழிபடுவோர்க்கு நன்மை செய்வான் என்பதும் சாதாரண மக்களுக்கு வழிபாட்டின் அருமைப்பாடுதோன்ற எடுத்துக் கூறப்பட்டதேயாம். வழிபாட்டின் பயன் ஆன்மாவிற்கேயாம். ஆன்மா, அறிவில், ஆற்றலில், பயன்பாடு நிறைந்த வாழ்வில், அன்பில் சிறந்து விளங்க வழிபாடு துணை செய்யும். குவிக்கப்பெற்ற கதிரவனின் ஒளி, ஆற்றல் மிக்குடையதாக இருப்பதுபோல்