பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/353

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

341


சமுதாயமோ, அரசோ ஏற்படுத்தித் தரவேண்டும். உழைப்போர்க்கு உழைப்புக்குரிய சூழலை உருவாக்காத அரசு, சமுதாயம் ஆகியவை அதனதன் தகுதியை இழந்ததாகவே கருத வேண்டும். உழைத்து வாழும் நெறி நடைமுறைப் படுத்தப்பட்டால் செல்வ வாழ்க்கையில் அருவருக்கத்தக்க மேடுபள்ளங்கள் அமையா. ஒரோவழி அமைந்து விட்டாலும் அறத்தின் அடிப்படையில் சீராக்கப்படுதல் வேண்டும். இஃது அற வேள்வியாகும்.

நுகர்வுக் களங்கள் நாளும் வளர வேண்டும்; புதியன புதியனவாக வளர வேண்டும். ஆடம்பரமின்றி, போதையின்றி அதேபோழ்து நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்தலுக்குரிய நுகர்வு வேட்கை வளர்ந்தால்தான் புதிய படைப்புகளுக்குரிய கட்டாயம் தோன்றும் தொழில் வாய்ப்புகள் பெருகும்; தொழில் வாழ்க்கை நடத்தலாம். அங்ஙனமின்றிக் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி’ என்றெல்லாம் சொல்லி நுகர்வுத்திறனை மழுங்கடித்தல் கூடாது. உழைப்பு வாய்ப்புகளை நாளும் கண்டு பெருக்கி வளர்ப்பதைத்தான் வள்ளுவம் “இயற்றல்” என்று குறிப்பிட்டது.

அறிவறிந்த ஆள்வினை வழியில், உழைப்பு வழியில் மட்டுமே பொருளிட்டும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். பிறர் பங்கைத் திருடிச் சொத்துச் சேர்க்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். எந்த வகையிலும் பணம் வைத்திருப்பவனைவிட அறிஞனும் உழைப்பாளியும் தரம் தாழ்ந்தவராகார். இன்றைய சமுதாயத்தில் அரசியல் அதிகாரமுடையவர்களும், பணம் வைத்திருப்பவர்களும் எந்தவிதத் தகுதியும் இல்லாது போனாலும் - சுரண்டி வாழ்ந்தாலும்கூட - மதிக்கப் பெறும் கேவலம் வளர்ந்து விட்டது. வளரும் சமுதாயத்திற்கு இஃது ஏற்றதன்று. விஞ்ஞானிகளையும் அறிஞர்களையும் உழைப்பாளிகளையும் மதிக்கும் மனப்பண்பு வளரவேண்டும். இன்று வளர்ந்துள்ள