பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பண மதிப்பீட்டுச் சமுதாயம் அறவே மாற வேண்டும். மனித இயல் மதிப்பீட்டுச் சமுதாயம் அமைய வேண்டும்.

இந்தியச் சமுதாயம் - தமிழ்ச் சமுதாயம் இன்றும் வேதகாலத்திலேயே வாழ்கிறது. காலமும் துாரமும் வெல்லப்படாத காலத்தில் தோன்றிய வருணப்பிரிவினைகள், சாதி, குல, கோத்திரப் பிரிவினைகள் இன்றும் அப்படியே பின்பற்றப்படுவது நியாயமும் அன்று; மரபும் அன்று. அறநெறிக்கும் மனித நேயத்திற்கும் முரணான சாதிமுறைகளைக் காப்பாற்றுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அநீதி என்பதை உணர்தல் வேண்டும். இந்த வருணம் - சாதி வேற்றுமைகளில் ஆதாயம் கண்டவர்கள் இந்த முறைகளைக் காப்பாற்றப் பெரிதும் முயல்கின்றனர். இதற்கு ஆதரவாகச் சாத்திரங்களையும் ஆகமங்களையும் காட்டுகின்றனர். இது நமது காலத்தில் மட்டுமன்று; அப்பரடிகள் காலத்தில் அவரிடத்திலேயே இந்தக் கைவரிசைகளைக் காட்டியுள்ளனர். அப்பரடிகள் தம்மிடம் தீண்டாமை. சாதி முதலியவற்றிக்குச் சாத்திரங்களைக் காட்டி வாதாடியவர்களைப் பார்த்து,

“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும்கொண் டென்செய்வீர்!”

என்று கண்டிக்கிறார். இன்று அரசியல் நெறியினரும் மதங்களைச் சார்ந்த பிற்போக்குவாதிகளும் சாதிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடைகோடி மனிதனுக்கும் கடைத்தேற்றம் - மேம்பாடு தேவை. இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால், கடைகோடி மனிதனை நிர்ணயிப்பதில் அளவை முறையாகப் பிற்பட்ட நிலையைக் குடும்ப அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாறாகச் சாதி, மதங்கள் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர். பிற்பட்டோரை நிர்ணயித்தல் கூடாது. இங்ஙனம் நிர்ணயித்தால் சாதிமுறைகள் நிலைப்பட்டுப் போகும்.