பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/355

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

343


சலுகைகளைக் காப்பாற்றச் சாதிகளைக் காப்பாற்றுவார்கள். அதுமட்டுமா? எந்தக் காலத்திலும் “கடைகோடி மனித” னுக்கு மேம்பாடு கிடைக்கவே கிடைக்காது. ஆதலால், இன, சமய, சாதிப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவருக்கும் வாழ்க்கை உத்தரவாதம் வழங்கப் பெறுதல் வேண்டும்.

உலகம் இருபாலது வேற்றுமைப்பட்டது. இந்த வேற்றுமை ஆக்கத்தின் பாற்பட்டது; மகிழ்வின் பாற்பட்டது. இந்த வேற்றுமை தவிர்க்க இயலாத தவிர்க்கக்கூடாத அமைப்பு. அதாவது, ஆண்-பெண் என்ற அமைப்பு. இந்த வேறுபட்ட அமைப்பு இல்லையானால் களிப்பு இல்லை; மகிழ்ச்சி இல்லை; துணை இல்லை. ஆதலால், இந்த வேறுபாட்டை - இயற்கையின் நியதியை மதித்துப் போற்றி வாழ்தல் வேண்டும். பெண், அனைத்து உரிமைகளுக்கும் உரியவள். அவள் வாழ்க்கைத் துணைநலம். இஃதன்றிப் பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாக, போகப்பொருளாகக் கருதுதல், மூடத்தனத்திலும் அடிமைத்தனத்திலும் ஆழ்த்துதல், பணம் காய்க்கும் கருவியாக மாற்றுதல் போன்ற தீமைகள் ஆகாதன! ஆகாதன! பெண் பெறும் பெருவாழ்வே ஆடவர்க்குப் பீடு சார்ந்த பெருமித நடையைத் தரும். பெண்மை வளர்தலும் வாழ்தலும் சமுதாயச் சீரமைப்பிற்கு இன்றியமையாததாகும்.

வாழ்க்கை, நீரோட்டம்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்; தேங்கக் கூடாது. சோகத்தில் ஆழ்ந்துவிடக் கூடாது. பிரச்சினைகளை நாம் ஆளவேண்டும். பிரச்சனைகள் நம்மை ஆள அனுமதித்து விடக்கூடாது. இதற்குக் கலை துணைசெய்யும். பண்டைய வாழ்க்கையில் வீடே கலைபயில் கூடமாக இருந்தது. அழகுக்கலை பெண்களைச் சார்ந்து வளர்ந்தமைக்குக் காரணமே அதுதான்! பெண்கள் இசைக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தனர். வீடுகள் அழகுபொலியும் கவின்கலை பயில் மனைகளாக விளங்கின. திருக்கோயில்களும் கலைபல நடைபெறும் கலை தெரிகோயில்களாக