பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/365

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

353


மானுடத்தினுடைய வாழ்வியலில் பழங்காலத்தில் பொதுமை இருந்தது. எனவே மானிடர் வாழ்வித்தே வாழ்ந்துள்ளனர்; மற்றவர்களை வாழ்விக்க இயலாத பொழுது நொந்து வேதனைப்பட்டுள்ளனர். அவர்கள் பொருளைத் தேடினார்கள். ஆனால் பொருளைச் சேமித்துப் பாதுகாக்கும் பூதமாக வாழ்வதற்கல்ல. “இல்லென இரப்போர்க்கு இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல்” என்ற நெறியே வாழ்வு நெறியாக இருந்தது. இங்ஙனம் அருளொடும் அன்பொடும் தேடிய பொருளே பொருள் என்று வாழ்தலே வாழ்வு. இத்தகு வாழ்வு தமிழகத்தில் நடைபெற்ற சங்க காலத்தில் வாழ்வே சமயமாக இருந்தது. சமயநெறிச் சீலங்கள் வாழ்க்கையின் துறை தோறும் ஊடுருவி ஊனும் உதிரமும் ஆக இருந்தன. ஆதலால் சங்க காலத்தில் நோன்பு என்ற சமயநெறி வழிபட்ட சொல், பிறர்க்கென முயலும் முயற்சியினைக் குறித்து வழங்கிற்று.

“தனக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென
முயலுநர் உண்மை யானே”

என்பது புறநானூறு. இத்தகு நெறி வாழ்வியல் நெறியாக இருந்தவரையில் சமுதாயம் உத்தரவாதமும் பாதுகாப்பும் பெற்றிருந்தது. காலப்போக்கில் அயல் வழக்கின் நுழைவு காரணமாக ‘விதி நம்பிக்கை’ வலுத்தது. உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் கால்கொண்டன. அறியாமை, வறுமை, ஏழ்மை முதலியன ஒன்றன்பின் ஒன்றாக, சமுதாயத்தை அகநிலையிலும் புறநிலையிலும் தாக்கிப் பீடழித்தன. அதனால் திருக்குறள் கூறுவது போல இலர் பலர் ஆயினர். மனித இயல்கள் அழியத் தொடங்கியபின் சமுதாயத்தில் மக்களுக்கு இருந்த பிடிப்பு தளர்ந்தது. சுயநலமே எங்கும் தலைவிரித்தாடியது.

இந்தச் சூழ்நிலையில் சில சிந்தனையாளர்கள் மீண்டும் சமய இயக்கத்தைப் புதுப்பிக்கவும் அவ்வழி சமுதாயத்தை