பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/369

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

357


குறைந்து போயிற்று. ஆதலால் மரங்களை வளர்த்தல், மலர்ச் செடிகளை வளர்த்தல் உயிர்க் குலத்திற்கு உரிய உயிர்க் காற்று (OXYGEN) தட்டுப்பாடின்றிக் கிடைப்பதாலும் மழைவளம் பேணுவதாலும் சமுதாயத் தொண்டுமாகும்.

“நீரின்றி அமையாது உலகம்” என்றது திருக்குறள், அதனாலன்றோ சிவம் தண்ணீரின் அருமை கருதி அதனை உச்சித் தலைமேல் வைத்துப் போற்றுகின்றார். இறைவனுக்கு உவப்பானது தண்ணீர்தான். அதனால் முன்னோர் திருக்குளங்களை அமைத்தார்கள். நீராடுதலின் இன்றியமையாமையை உரைக்கத் தீர்த்தவாரித் திருநாள் ஏற்படுத் தினார்கள். கண்ணிரண்டும் இழந்த தண்டியடிகள் திருவாரூர் கமலாலாயம் என்ற திருக்குளத்தைச் சேறு அள்ளித்துய்மை செய்த அரிய வரலாறு நம்மனோர் வாழ்வாவது என்று? இன்று திருக்கோயிலைச் சார்ந்த திருக்குளங்கள் பேணு வாரில்லாமல் உள்ள அவலநிலை ஆற்றொணாத் துயரத்தைத் தருகிறது. திருக்குளங்கள் துர்வை அள்ளல் சமுதாய நலம் தழுவிய சமயத் தொண்டு.

ஆன்றோரே! சான்றோரே! சமயம் வேறு சமுதாயம் வேறு என்று பிரிக்காதீர்கள்! இரண்டும் ஒன்றையொன்று தழுவியது. ஒன்றில்லையேல் பிறிதொன்றில்லை. நமது சமயத்தைக் கடவுட் சமயம் என்ற நிலையிலிருந்து கோயில் சமயமாக்கிச் சமூதாய சமயம் ஆக்க வேண்டும்! இது நடந்தால் வாழ்வு சிறக்கும்! வரலாறும் சிறக்கும்!

பழநிப் பழக்கதை

இயற்கைப் பெரும் பகுதி இயல்பாகவே உயிர்க்குலத்திற்கு இதத்தையும் மகிழ்வையும் தரக்கூடியனவாகவே அமைந்துள்ளன. ஆயினும் ஒரு சில பரிணாம வளர்ச்சி நிலை எய்தி முழுமை நிலை அடைந்த பிறகே இதமும் இன்பமும் தருவனவாய் அமைந்துவிட்டன. இந்த வகையினவற்றுள்