பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

25


லைச் சார்ந்து வாழ்பவர்கள் - பணி செய்பவர்கள் அனைவரும் தம்முள் எந்த வேறுபாடுமின்றி அந்தத் திருவமுதைப் பங்கிட்டு உண்பதும் உழைப்பதும் ஒரு பொருள் பொதிந்த காட்சி! வாழ்க்கைக்கு உழைப்புத் தேவை. உழைப்புக்கு உணவு தேவை. திருக்கோயில் இயக்க அமைப்பில் உணவு வழங்கப்பட்டுவந்தது. பணநாயகத்திற்கு அங்கு இடமில்லை. அதனால், உழைத்தவர்கள் உடல்நலம் பெற்றிருந்தனர். திருக்கோயில் திருவமுதுமுறை நல்ல சத்தணவுமுறை. பொங்கல், வடை, பாயசம், அப்பம், சுண்டல், அவல், பொரி இவை இறைவன் திருமுன்னர் படைக்கப்படும் பண்டங்கள். பயறுவகையிலுள்ள புரதம்-உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அதனாலேயே மாலை நேரத்தில் இறைவன் திருமுன்னர் கடலை, பயறு வகைகள் சுண்டல் செய்து, படைத்துப் பெரியோர்க்கும் சிறப்பாகக் குழந்தைகளுக்கும் வழங்கினர். இங்ஙனம் நுகர்பொருள் எல்லோருக்கும் ஒரே முறையில் எளிய முறையில் கிடைக்கச் செய்யும் வாழ்க்கையிலும் சிறந்த ஒப்புரவு வேறு என்ன இருக்க முடியும்? உடையவர்கள் திருக்கோயிலில் இறைவனின் பெயரால் காணிக்கை இடுவார். இந்தக் காணிக்கைப் பொருளைக் கொண்டு வாய்ப்பற்றவர்களுக்கும் வாய்ப்புகளை நல்கி வளமுடையராக்கத் திட்டம் தீட்டி - அவ்வழி வளமார வளர்ந்து மகிழ்வர். ஆதலால், திருகோயிலைச் சார்ந்து வளர்ந்த ஒப்புரவு வாழ்க்கை, புகழ்ந்து பாராட்ட வேண்டியதொன்று.

கல்விச் சாலை

மனிதன் வளர்ச்சியடையக் கல்வி தேவை; கேள்வி தேவை. கல்வியும் கேள்வியும் எளிதில் பெறும் சமுதாயமே மேம்பாடடைய முடியும் கற்றல் கேட்டல் உடையார் பெரியார் என்று திருஞானசம்பந்தர் அருளிச் செய்து உள்ளார். இத்தகைய அருமையான கல்வியினைத் திருக்

கு.XII.3.