பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/371

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

359


குழந்தைப் பருவநிலையில் பேதம் இல்லை. உரிமை, வேற்றுமை, பகை வாசனையின்றிப் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பொல்லாத சமுதாயம் பொல்லாதன வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்து விடுகிறது. மனித குலத்தில் சொத்துடைமை தோன்றிய பிறகுதான் மனிதன் ஒருமை நிலையில் வாழ்தலினின்றும் மாறுபட்டான். எனது ‘உனது என்ற நச்சு மரங்கள் வளர்ந்தன. இந்த நச்சு மரங்கள் மானிட சமுதாயம் என்னும் கட்டுமானத்தைப் பிளந்தன; பிரிவினைப் படுத்தின; பகைமையை வளர்த்தன. ‘எனது’ ‘உனது என்னும் நச்சுமரங்கள் ஈன்ற கனிகளே நான், அதிகாரம், காவல், அரசு ஆகியன! ஆக, மானுடம் அறிவு, அன்பு, இணக்கம் உறவு என்று வளர்ந்து சொர்க்கத்தைப் படைப்பதற்குப் பதிலாக அழுக்காறு, அவா, வெகுளி, சண்டை, காவல், சிறை என்னும் தீயவட்டத்தை மையமாகக் கொண்டு சுழலத் தொடங்கிவிட்டது. வாழ்க்கை நரகமாகி விட்டது. இது தவறான பாதை என்று மானுடத்திற்கு உணர்த்தத் தோன்றியது பழனியின் பழக்கதை.

இருப்பது ஒரு கனி. தாயும் தந்தையும் கணபதி, முருகன் ஆகிய குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பதே முறை. ஆனால், போட்டிகள் கால் கொண்டுவிட்ட உலகத்தின் நடைமுறையால் பாதிக்கப்ட்ட மனிதன் எழுதிய கடவுட்கதை என்பதை மறந்து விடக்கூடாது. போட்டி உருவாக்கப்படுகிறது. கணபதி, முருகன் நிலை தீய திசையில் நடை பயிலத் தொடங்கிய நிலை ஆதலால், “எங்களுக்குப் போட்டி வேண்டாம்” என்று மறுத்துவிட்டு இருவரில் ஒருவர் எடுத்துக் கொள்ள மனம் ஒருப்பட்டிருக்கலாம். அன்றைய உலகம் அஃதன்று. அது கிடக்கட்டும். சமமாகவாவது பங்கிட்டிருக்கலாம். இதுவும் தீய திசையில் மேலும் நடந்த நிலைதான். சமம் இருக்கலாம். அதுவே உரிமையாக மாறும்பொழுது வேறுபாடுகள் கால்கொள்ளும் என்பதை மறந்துவிடக் கூடாது. தவிர்க்க முடியாத நிலையில் போட்டி தொடங்கிவிடுகிறது. போட்டியில் ஒருவர்-முருகர் உண்மை