பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/374

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைப்பு. எனவே எல்லார்க்கும் இன்பம் என்ற புதுமை நிறைந்த பொதுமை தழுவிய சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயமே தமிழர் கண்ட தமிழர் சமயங்கண்ட சமுதாயச் செந்நெறியாகும்.

இந்நிலையில் சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயத்துக்கு ஒரு வகையில் சராசரித் தகுதி ஒன்றை வரையறை செய்ய வேண்டியுள்ளது. இவ்வடிப்படையிலேயே சமய உண்மைகள் சைவத்தில் விளக்கப்பெறுகின்றன. ஒரு மனிதன் சராசரித் தகுதியுடையவனாக இருப்பதற்கு அவன் இறை வழிபாடு நிகழ்த்துபவனாக இருக்க வேண்டும் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். இவ்வாறே சராசரிக் குறைகளைக் கடந்த அறிவின் முதிர்ச்சியையே ஞானம் என்று வரையறை செய்கிறது சைவம். சமநிலைச் சமுதாய அமைப்புக்கு, உடையார் இல்லார் என்ற வேற்றுமை இல்லாது உரிமையுடையார் ஒருவருக்குப் பொறுப்புடையார் வழங்குவதை யொத்த ஈதலைச் சைவ சமயம் மையமாகக் கொள்கிறது.

ஆயினும், இத்தகைய சமநிலை சமவாய்ப்புச் சமுதாயத்தை அறவழியில் மலரவைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, மக்களின் வாழ்த்துப் பொருளாக இல்லாமல் வாழ்வுப் பொருளாக அமையும் கடவுள் வழிபாட்டில் பொதுநிலை, சமநிலை, சமரசம் என்பவைகளின் உண்மைப் பொருளை அறிந்து கொள்ளவேண்டும்.

நமது நெறி ஒரு கடவுளைத் தொழும் உயர் மாண்புடையது. ஆனால், அறுவகைச் சமய இணைப்பானது, நம்முடைய சமுதாயத்தில் பலரை ஒரு கடவுள் வழிபாட்டிலிருந்து நெடுந்தொலைவுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. எந்தவொரு மூர்த்தியையும் ஆன்ம நாயகனாக ஏற்றுக் கொள்ளாமல் கிழமைக்கொரு சாமி, சந்தர்ப்பத்துக்கொரு சாமி என்று தொழுது ஏய்க்கும் அவலம் இன்று பெருகிவிட்டது. நால்வர் காலத்தில் பல தெய்வ வழிபாடுகள்