பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழக்கில் உள்ளன. வேறுபடு சமயங்கள் பலவாயினும் அவையனைத்திற்கும் குறிக்கோள் ஒன்றேயாம். ஆயினும் தத்துவக் கட்டுக் கோப்பால், வழிநடத்தும் நெறிமுறைகளால் அவை தம்முள் பள்ளி வகுப்புப் போன்ற வேறுபாடுகள் இருக்கின்றன. அங்ஙனமிருப்பது இயற்கையும் கூட இந்த வேறுபாடுகள் செயற்கையாகக் கற்பிக்கப் பெற்றவையல்ல. திருவருளால் பெறப்பெறும் மெய்யுணர்வு முதிர்ச்சியினாலும், மெய்ப் பொருள் காணும் திறனாலும், அனுபூதியின் பயனாலும் தோன்றியவை ஆகும். இந்த வேறுபாடுகள் வேறுபடுத்தும் இயல்புடையனவல்ல. அப்பரடிகள் அருளிச் செய்தது போல “அறுவகைச் சமயத்து அவரவரைத் தேற்றுந்தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந்தகையன” என்பதே இந்த வேறுபாட்டின் இயல்பு. இதனை மறந்து சமரசம் என்ற பேரால் கலப்படம் செய்வது தத்துவ அறிவின் வளர்ச்சியையும், ஒன்றியிருந்து அனுபவிக்கும் திருவருள் அனுபவத்தையும் எய்தி இன்புறவொட்டாமல் தடைசெய்யும். தன்னுடைய தத்துவச் சார்பில் தன்சமயத்தில் பற்றுக் கொள்ளுதலும், பிறிதொரு சமயத்தின்மீது வெறுப்புக் கொள்ளாது அந்நெறிக்கேற்ற உதவி புரிதலுமே சமரச ஒழுக்கமாகும்.

சித்தாந்த சமயம்

சித்தாந்த-அதாவது, சிந்தனையின் முடிந்த முடிபு என்று பொருள். சித்தாந்தமே முடிந்த முடிபு. மற்றையது “பூர்வ பக்கம்” என்பது இரத்தினத் திரையம். தமிழ், காலத்தால் மூத்த மொழி, கருத்தாலும் மூத்த மொழி, தமிழினம் பல நூறு ஆண்டுகட்டு முன்பே நாகரிகத்தில் சிறந்து, பண்பாட்டில் மேம்பாடுற்று விளங்கியமை போன்று, விழுமிய சமய நெறியினும் சிறந்து விளங்கிது. “தமிழரது பேரறிவின் முதிர்ச்சியின் விழுமிய பயன் சித்தாந்த சமயம்” என்று மேனாட்டு அறிஞர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.