பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/386

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று ஏசுமதமும் கூறுகிறது. இதனாலேயே பிரிந்த பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என்று அறிவித்தது. நாம் நமது பாரம்பரியத்துக்கு ஏற்ப மதச்சார்பற்ற அரசை அமைத்ததுக் கொண்டோம். அனைத்துச் சமயங்களையும் ஏற்றுத் தழுவி நிற்கும் அரசு என்பது விழுமிய கருத்து.

மதச் சார்பற்ற வாழ்க்கை, மதமே இல்லாத வாழ்க்கையல்ல; சன்மார்க்க நெறியில் நிற்றலே மதச் சார்பற்ற வாழ்க்கை

இன்று நமது நாட்டில் “இந்தியர்” என்ற உணர்வுக்கு மாறாகப் “பெரும்பான்மையினர்” என்ற அடிப்படையில் ஒருவித உணர்வுமாக முரண்பட்ட நிலையில் இயங்குவது விரும்பத்தக்கதன்று. இந்தப் போக்கு, இந்தியாவின் ஆன்மிக அனுபூதிச் செல்வத்தையே அழித்துவிடும். இந்தியா நாட்டின் முன்னேற்றத்தையும் பாதிக்கும்.

இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாகக் காப்பாற்ற, “இந்தியா” மக்களிடத்தில் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றும் வழிவகைகளை ஆராய அனைவரும் வருக! கடமைகளில் பங்கேற்றுப் பணி செய்ய-குறள்நெறிச் சமுதாயம் அமைய இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி விடுக்கும், அன்பழைப்பு!


இனி நாம், சமய-சமுதாயத்
துறைகளில் என்ன செய்யவேண்டும்?

தமிழ் நாகரிக வரலாற்றில் வளர்ந்த காலப்பகுதி திருக்கோயில் கண்ட காலமேயாகும். நமது சமய, சமுதாய மரபில் திருக்கோயில் வழிபாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. இன்று திருக்கோயில்கள் ஓரளவு சமய மரபுகளைக் காப்பாற்றிவந்தாலும் சமுதாய மரபுகளைப் புறக்கணித்துவிட்டன என்றே கூறவேண்டும். அப்பரடிகள்,