பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பணிகள் அனைத்துமே தொண்டாகச் செய்யப்பெறுதல் வேண்டும். இன்றோ திருக்கோயில் பணிகள் பிழைப்பு நோக்கி இயற்றும் தொழில்களாகிவிட்டன. இது மிகவும் வருந்தத்தக்கது.

திருக்கோயில் மானுடம் முழுவதையும் அங்கீகரிக்க வேண்டும். எந்த வேறுபாடுமின்றி அங்கீகரிக்க வேண்டும். ஒவ்வொர் ஊரிலுமுள்ள அனைவரும் அந்தந்த ஊர்க் கோயிலில் வழிபடுவாராக இருக்கவேண்டும். அவ்வழியாக கடமையும் உரிமையும் உடையவராக வேண்டும். வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோயிலை மையமாகக் கொண்டு திருக்கோயிலில் நிகழவேண்டும். மக்கள் வாழ்வியல் நிகழ்வுகளின்பொழுது தரும் காணிக்கை மற்றும் ஆண்டுக் காணிக்கை இவைகளைக் கொண்டே திருக்கோயில்கள் நடைபெற வேண்டும். ஒவ்வொருவரும். தமது ஈட்டத்தில் குறைந்தது 10 விழுக்காட்டை ஆண்டு தோறும் திருக்கோயிலுக்குத் தரவேண்டும். இந்நிதியில் ஒரு பகுதி 3% திருக்கோயிலுக்குச் செலவழிக்கப் பெறுதல் வேண்டும். மீதத்தில் 5% சமுதாயத்தின் இன்றியமையாத் தேவைகளாகிய கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் முதலியவற்றிற்குச் செலவழிக்கப் பெறுதல் வேண்டும். இத்துறையே இலக்கியம், கலை, தத்துவ வளர்ச்சியையும் கவனித்துக் கொள்ளவேண்டும். மீதம் 2% திருக்கோயில் சார்ந்த குடிமக்களில் வாய்ப்பிழந்தவர்களுக்குத் திருமணம் மற்றும் சில உதவிகளுக்குமாகச் செலவழிக்கப்பெறுதல் வேண்டும். திருக்கோயில் நிர்வாகம் சமூகத்தால்-ஊராண்மை மக்களால் நடந்துப்பெறுதல் வேண்டும். திருக்கோயில் நிர்வாகக் குழுவில் ஊரின் பல்வேறு சமூகமும் சுழற்சி முறையில் அனைவரும் பங்கேற்கத் தக்கவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திருக்கோயில் நிர்வாகத்தில் அரசுத் தொடர்பு இருத்தல் நன்றன்று.

இதுதான், நமது திருக்கோயில்களில் தழுவி நிகழ்ந்த நாகரிகம்; இந்த நாகரித்தைப் புதுப்பித்தால் சமயம் வளரும்.