பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/394

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விளங்குவதே ஆன்மிகம். ஆன்மா சுயநலமற்ற ஊழியம் புரியும் சத்திபெற்று விளங்க வேண்டும். இத்தகு ஆன்ம அனுபூதியைப் பெறக் கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் தேவை. கடவுள் என்பது பண்புகளின் முழு வடிவம்.

“குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே”
“நன்றுடையானைத் தீயதில் லானை”

என்னும் அருள்வாக்குகளை எண்ணுக கடவுள் வழிபாடு என்பது கடவுள் வழி நிற்றல். கடவுளை வழிப்படுதல் என்றே பொருள்படும்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”

என்ற திருக்குறள் நினைவிற்குரியது.

இங்கு ‘அவித்தல்’ என்பதற்கு அழித்தல் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவித்தல் என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்தல் என்பதே பொருள்.

கடவுளை எண்ணுவதன் மூலம் - சிந்தித்தல் மூலம் கடவுளின் நிறை நலமிக்க இயல்புகளை ஆன்மாக்கள் பெற்று அவை தம்முடைய பொறி புலன்களில் இறை நலத்தினைத் தேக்கி வாழ்தலே ஆன்மிகம். இங்ஙனம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கிய அப்பரடிகளின்,

“நாமார்க்கும் குடியல்வோம் நமனை அஞ்சோம்”

என்னும் பாடல் அவரது ஆன்ம வாழ்க்கையின் மேன்மையை விளக்குகிறது.

இன்று நமது நாடு வாழ்கிறவர்களை அவாவி நிற்கிறது. நம்முடைய மனிதவளம் அனைத்தும் வெளிக்கொணரப்பட்டு இயங்கினால், செயற்பட்டால் வறுமை ஏது? ஏழ்மை ஏது? சாதி ஏது? நரகம் ஏது? இந்த மண்ணிலேயே விண்ணக வாழ்க்கையைக் காணலாம்; காணமுடியும்! அத்தகு மனித