பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/403

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்து மொழிகள்

391


தமிழுக்கும் இடங்கொடுக்கப்பட்டதா? இல்லையே! தமிழுக்கு இடங்கொடுக்கப்படாவிடில் தமிழர்களாகிய நாம் இடந்தேடி இன்பமடைய வேண்டாமா?

சுரண்டல்களினாலும்-சுயநலத்தினாலும் தமிழன்பின் தங்கிய நிலை இப்பொழுது சமயத்துறையில் அருக ஆரம்பித்துவிட்டது. இந்நிலை நல்லதொரு மாற்றத்தினை உருவாக்கி உண்மைநெறி உலகெல்லாம் பரவ உதவும்.

அகமும் புறமும்

ஆன்மாக்களுக்கு ஆசையதிகம். மனிதர்களுக்கிருக்கும் ஆசையை அளவிட்டு உரைக்கவியலாது. ஆசையை அழித்து விடுதல் என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. எந்த மனிதனுக்கும் ஏதாவதொன்றிலே ஆசையிருக்கத்தான் செய்யும். எல்லாச் செல்வங்களையுமேற்று-உண்டு, உடுத்து உறங்கி வாழ விரும்புகின்றனர் சிலர்; செல்வாக்குப் பெருக்கால் சிறந்த பதவிகளைப் பெற்று வாழ ஆவல் கொள்கின்றனர் சிலர்; நாட்டை ஆளும் பேற்றினைப் பெற்று-நனிசிறந்து தலைவர்களாக வாழவிரும்புகின்றனர் ப்லர். இவ்வாறு ஒவ்வொரு வகையான ஆசைகளுடன் மனித இனம் அலைந்து கொண்டிருக்கிறது.

நாமுங்கூட நல்ல அருள்நெறி வாழ்வு வாழ்ந்து அறச் செல்வர்களாகத் திகழ்பவர்களைக் காண ஆசைப்படுகின்றோம். ஆசையைப் பொறுத்தமட்டில் நம் கைக்கொள்ள வேண்டியது ஒன்றேயொன்று-அதுதான் எல்லை. எதற்கும் ஒரு வேலி-எல்லை-வரையறை அவசியம் வேண்டும். மனிதனின் ஆசையுணர்வு அளவுக்கு அதிகமாக-எல்லை கடந்து செல்கிறபோது ஆபத்து நேருகின்றது. ஒரு வரையறையுடன் எந்த உயிருக்கும் இன்னலற்ற முறையில்-நன்மை பயக்கும் வகையில் ஆசை உருவெடுத்தால் அது போற்றப்பட வேண்டியதே.