பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/411

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்து மொழிகள்

399


சைவமடங்களை நம் முன்னோர்கள் உண்டாக்கினார்கள். ஆனால் அவர்களது எண்ணம் சிலகாலம் சிதைவுற்றுப் பிறழ்ந்ததை மறுப்பதற்கில்லை. இப்பொழுது இந்நிலை மாறி வருகிறது. கைலாயத்து உச்சியுள்ள காளத்தியானைக் தன்னிலே கண்டு மற்றவர்களுக்குக் காட்டச் சைவப் பெரியவர்கள் முன் வர வேண்டும். இதனாலேதான் சைவ சமயத்துக்கு முழு நேர ஊழியர்கள் தேவை என்கிறேன். இறைவனைக் கைலாசவாசியாகவே சிலர் கருதுகிறார்கள். வான் பழித்து மண்புகுந்து மனிதரை ஆட்கொள்பவன் நம்பெருமான். ஆண்டவனை எட்ட வைத்து எண்ணும் நிலை மாற வேண்டும். மண்ணிலே விண்ணைக் கண்டு விண்ணகத்து வித்தகனை நெஞ்சத்தில் அமர்த்த வேண்டும். தட்டினால்தான் திறக்கப்படும்- கேட்டால்தான் கொடுக்கப்படும் என்று நமது சைவநெறி சொல்லவில்லை. வேண்டப்படுவதை அறிந்து-வேண்டிய முழுதும் தருபவன் இறைவன். ஆகவே நால்வர் நடந்து நடந்து வளர்த்த நமதுநெறி நாலாபக்கமும் பரவி விரவ வேண்டும். ஓர் ஒழுங்கு முறையான கட்டுக் கோப்பு நமக்குத் தேவை. கலப்பு, ஒழுங்கினை உண்டாக்க இடையூறாயிருக்கும். மற்றைய மதங்களிலுள்ள ஒழுங்கினை நமது மதத்தில் காண விரும்ப வேண்டும். மதம் மாறும் நிலையை நம்மிடையேயிருந்து விலக்க வேண்டும்.

இறை வழிபாடு

மனிதப் பிறப்பின் மாண்புறு நிலையை நயக்கத் தக்க நல்ல வழியில் அனுபவித்து உயரப் பழகிக் கொள்ள வேண்டும். மனிதன் வேகமாக உழலுகிறான்; சுழலுகிறான். ஆனால், ஏன்? எதற்காக உழலுகிறோம்? என்று அவன் சிந்திப்பதில்லை. குறிப்பாகத் தமிழர்களாகிய நமக்குக் கேள்வி கேட்பதென்பதே கசப்பாயிருக்கிறது. எதையும் துருவித் துருவி துணுக்கமாகவும் ஆழமாகவும் ஆராய்ந்ததினாலேதான் தத்துவாசிரியர்களும் பெரும் பேராசிரியர்களும் தோன்றி