பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/426

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். உலக நாடுகள் பேரவை - ஐக்கிய நாடுகள் சபை ஆற்றல் மிக்குடையதாக அமைய வேண்டும். அது போலவே உலக சமயங்களின் மையம்-சபை ஒன்று தொடங்கப் பெறுதல் வேண்டும். இந்த உலக சமய சபை உலகத்தில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் சமாதானத்தையும் வளர்க்கப் பாடுபட வேண்டும்; உழைக்க வேண்டும். மானுடம் வென்று விளங்க வேண்டும். கணியன் பூங்குன்றன் அருளிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற வாக்கு மெய்யாகவே உருப் பெறுதல் வேண்டும். இதுவே அமைதிக்கு வழி!’

யாதொரு நிபந்தனையும் இன்றி மானுடம் வளர, வாழ உத்தரவாதம் அளிப்பதே அறிவியலின் நோக்கம்! அருளியலின் கடமை! இந்த நோக்கம் நிறைவேற இப்புவியிலுள்ளோர் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வியாபார லாப நோக்கமின்றி நுகர்வுப் பொருள்கள் மட்டுமே உற்பத்திசெய்ய வேண்டும். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தனி ஒருவன் கூடப் பட்டினியால் சாக அனுமதித்தல் கூடாது. அறியாமை, முற்றாக அகற்றப்படுதல் வேண்டும். விரைவில் உலகம் தனக்கு ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலக மொழியை உலக மாந்தர் அனைவரும் கற்றுப் பேச வேண்டும். விரைவில் கடவுள்-மானுடம் தழுவிய உலகப் பொதுச் சமயமும் ஒன்று கண்டாக வேண்டும். இதற்கு வழி வகுப்பதற்கு வாய்ப்பாகப் போற்றுதலுக்குரிய போப்பாண்டவர், திருச்சபைகளுக்குப் பல சமயங்களுடன் விவாதித்தல், கலந்துரையாடல், தெளிவுகாணல் நெறியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது வரலாற்றின் திருப்பு மையம்! போதும். போதும் பிரசாரங்கள்! மாந்தர்களிடையே அடிக்கடி கூடுதல், கலந்துரையாடல் முதலியன நிகழட்டும்! அமைதி கனிய வழி இதுவே! அமைதியை வளர்ப்போம்! காப்போம்!