பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/430

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பழகத் தவறிவிட்டான். நாயினை, மிக நல்ல விதமாகப் பழக்கினான்.

ஆனாலும், அவன் பழகத் தவறிவிட்டான். அவனை இன்று வருத்துவது புறப்பகையல்ல. அகப் பகையேயாகும். அனல் அவனைச் சுடுவதில்லை. ஆனாலும் அழுக்காற்றுத் தீ அவனைச் சுடுகிறது. அலைகடல் அவனை வருத்துவ தில்லை. அதனை அடக்கிக் கலம் செலுத்துகிறான். ஆனாலும், அவா வெள்ளம் அவனை அலைக்கழிக்கிறது.

இந்த அகப்பகையை வென்று, வெற்றி பெற்றாலே மனிதன் பகைப்புலத்துக்கு ஆளாக மாட்டான். மனிதனின் வாழ்வில் படைக் கலங்கள் மட்டும் அஞ்சாமைக்கு அடையாளமல்ல. படைக்கலம் தாங்கியவர்களிலும், பஞ்சை மனிதர் உண்டு. படைக்கலம் தாங்காமலே கூடச் செருக்களத்தில் நின்ற வீரர்களும் உண்டு. அப்பரடிகள் படைக்கலம் தாங்கிய வீரரா? வில்லைத் தாங்கினாரா? வாளைத் தாங்கினாரா? ஒன்றையும் இல்லை! அவருடைய நெஞ்சத்தைப் பழுதிலாத் துறவு என்ற அரணில் சேர்த்தார். அங்கே நிலைநிறுத்தினார்.

ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார். ஒண்திறல் பிறந்தது. இறைவன் திருநாமமாகிய ஐந்தெழுத்தையே நாவினில் படைக்கலமாகக் கொண்டார். கோட்டை கொத்தளங்கள் பெற்று-கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை வெற்றி கண்டார். அஞ்சுவது யாதொன்றுமில்லை. அஞ்ச வருவதுமில்லை என்று, அடலேறு என முழங்கினார். இந்தத் தறுகண்மை-பேராண்மை சமய நெறிக்கே உரியது. அருளியலுக்கே உரியது.

ஆனால் ஐயகோ! இன்றையச் சமய வாழ்க்கை அச்சத்தின் கொள்கலனாக மாறியிருக்கிறது. கோட்டைக்குரிய பல்லவப் பேரரசனையே கலங்கவைத்த நெறியினைச் சார்ந்தவர்கள் கோட்டையின் காவல்காரர்களைக் கண்டே