பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/433

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்

421


அல்லது தன்மை இறையியற் சார்புடையது. இல்லை! இறையியலிலேதான் நிறையெனப் பெயர் பெறுகிறது. நிறை, நிலையில் நிற்றல்; மனித நிலையில் நிற்றல், பிறிதின் துயர் பொறாத தன்மையான மனம் என்பார், “மென்சிஸ்” என்ற சீன நாட்டு அறிஞர். வள்ளுவம், “பிறதின் நோய் தந் நோய்போல் போற்றுதல்” என்று வகுத்துக் காட்டும் நிறை, ஒழுக்கத்தின் நிறைவு என்பார் வள்ளுவர். “நிறைகாக்கும் காப்பே தலை” என்பார். இது மனித குலத்திற்குப் பொதுவென வகுத்த நெறியே! பொறிகள் வாயிலாகப் புறத்தே சென்று அலையாமல் உயர் அறிவின் வழி! உயிர் நிலை நிற்றல் நிறையெனப்படும். நிறையுடையார் ஆவலற்றோர்; அவா அற்றோர்; வெகுளுதல் இல்லாதவர். இத்தகு நிறையுடையார் நெஞ்சினுள்ளே இறைவன் இருக்கின்றான். அவர்களின் தூய அன்புத் தவத்தில் வெளிப்படுகின்றான். அவர்களின் கருணை நிறைந்த சீலத்தில் உறைகின்றான். நிறையுடையார் நெஞ்சம் இறைவன் வாழும் இடம்! நிறையுடையாரைக் கண்டால் தொழுது போற்றுமின்!

உலகியலின் உயிர்நாடி நீரினுள் அமைந்து கிடக்கிறது. “நீரின் றமையாது உலகு” என்பார் வள்ளுவர். தண்ணீர் உலகத்தின் இன்றியமையாத் தேவை. வெப்பம் தணிதற்கும் தூய்மை பெறுதற்கும், வளர்ந்து வாழ்தற்கும் நீரே பயன்படுகிறது. அதனாலன்றோ நீரின் சின்னமாகிய கங்கையைக் கடவுள் தன் தலைமீது தாங்கினான். அஃதொரு புராணமல்ல; வரலாறல்ல; வாழ்வியல் முறை. “தண்ணீரின் அருமை தெரிந்து தலைமேற்கொள்க!” என்பதே தத்துவம், தீர்த்தங்கள் ஆடுவதனால் மட்டும் பயனன்று. தீர்த்தங்களின் உயிர்ப்பு, நிலையான தூய்மைப் பெருக்கம்; வெப்பம் தணிதல், உயிர்க்குறு உதவி செய்தல் ஆகிய செய்தவம் மேற்கொள்வார் நிறைவுடைய நெஞ்சினராவர். நீரின் பெருமையறிந்து ஏற்றுப் போற்றுதல்-நீரைத் தொழுதல் நன்று. நீரினுள் நிமலன் நிலவுகின்றான். அப்பரடிகளும் இறைவனைத் “தீர்த்தங்கள் ஆனான்” என்பார்.