பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/439

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்

427


ஆயினும், “மனித குலம் ஒன்றே” என்ற சுருதியில் மாறுபாடுகள் இல்லை. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பது சமய நியதி; நீதி.

உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும்-ஏன்? மற்றைய உயிரினங்களும் கூட இறைவனுடைய அன்பிற்குரியவை. இந்த உயிரினங்களைப் பேணிப் பாதுகாப்பதையே இறைவன் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டுள்ளான். உயிரினங்கள் துன்பத்தினின்று நீங்கி, ஆரா இன்ப அன்பினில் திளைத்து மகிழ வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளம். ஆனால், உயிர்கள் நிலைத்த இன்பத்தில் மகிழ வேண்டுமாயின் இன்பம் வழங்குதலைவிட, துன்ப நீக்கம் செய்வதே முதற்கடன்.

துன்பத்தையும் கூட மேலெழுந்தவாரியாக நீக்குவது நிறைவான பயனைத் தராது. துன்பத்திற்குக் காரணமாய அறியாமையை-உயிர்ப் பகையை அடியோடு அகற்ற வேண்டும். கிழங்குகளை வெட்டியவிடத்தில் மேலும் தளிர்ப்பதைப் போல, அறியாமையும் பகையும் மேலும் மேலும் வாய்ப்புக் கிடைத்துழியெல்லாம் தவழ்ந்து வளரும். அதனாலன்றோ சேக்கிழார், பாசப் பழிமுதல் பறிப்பார் போல என்றார். நிலம் கடினமாக இருந்தால் முளைத்த கீரையைப் பிடுங்கும்போது கீரை ஒடிந்தே கைக்கு வரும். மீண்டும் கட்டை தளிர்க்கும். நிலம் தண்ணீரால் நனைந்து மண் இளகியிருக்குமானால் கீரை பிடுங்கும்பொழுது வேரோடு வரும். அதுபோல நெஞ்சம் கல்லாக இருக்குமானால், துனபங்கள் மாற்றப்பட்டாலும் துன்பத்துக்குரிய காரணம் நீங்குவதில்லை. நெஞ்சு திருவருட்புனலால் நனைந்து, அன்பினால் நெகிழ்ந்து கொடுக்குமாயின் அப்பொழுது துன்பம் மட்டும் நீங்குவதில்லை; துன்பத்துக்குரிய காரணங்களும் நீங்குகின்றன. இன்பப் புதுமது வெள்ளமும் பாய்கின்றது. இவை அனைத்தும் உடன் நிகழும் நிகழ்ச்சிகள்