பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/444

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமூலர் எடுத்துக்காட்டும் சமய வழிப்பட்ட கடமைகள் நான்கு. அவற்றுள் ஒன்று கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகும். மற்ற மூன்றும் உயிரினங்கள் மாட்டு அன்பு செய்வதேயாகும். பசுவிற்குப் புல் கொடுப்பதும், பசித்தவர்க்குச் சோறு வழங்குவதும் கேட்பவர் இன்ப நலம் பெறும் இனிய சொற்களை வழங்குதலும் சமய வழிப்பட்ட கடமைகளேயாம். திருமூலர் தெளிவாக-உறுதியாக எவ்வுயிர்க்கும் அன்பாக இருப்பதே ஈசனுக்கு அன்பாகும் என்று கூறியுள்ளார். சைவ உலகத்தின் செஞ்ஞாயிறு எனத் திகழும் அப்பரடிகள் எங்கும் ஈசன் இருக்கிறான் என்று கருதி எல்லார் மாட்டும் அன்பு செய்யாதவர்கள் சமயச் சடங்குகளாகிய கங்கை, காவிரி முதலிய புண்ணிய ஆறுகளில் மூழ்கினாலும் உரிய பயனைப் பெறமுடியாதென்கிறார். நெஞ்சில் ஓடும் வஞ்சனை ஆறு, வற்றினாலேயே திருவருட் புனல் பொங்கி வழியும் என்பது அப்பரடிகளின் விழுமிய கருத்து.

இங்ஙனம் உலகிடை நிலவும் எல்லாச் சமயங்களும் மனித குலத்தை இன்ப அன்பு கலந்த அணைப்பில் ஒரு குலமாக்க முயற்சிக்கின்றன. மனித குலம், ஒன்று என்பதே பொது நீதி. இடையில் நிலவும் வேறுபாடுகள் வேடிக்கை மனிதரின் விளையாட்டு அமைப்புகளே ஆகும். சமயங்களின் ஒருமித்த குரல், “அன்பு காட்டு; உதவி செய்; பகையை மற; பண்பு பாராட்டு; அன்புப் புனலால் தனது மனம் மற்றோர் மனம் ஆகியவைகளைக் குளிப்பாட்டு; உயிர் வர்க்கத்தின் மகிழ்ச்சிப் புனலால் எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களைக் குளிப்பாட்டுங்கள்” என்பதேயாகும்.