பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/453

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்ணும்

444


பெண்ணோ இயல்பிலேயே பெற்றிருக்கிறாள். அதனாற்றான் அன்பிற்குவமையாகத் தாயே பேசப்படுகிறாள். இலக்கியங்களில் பெண் பருவந்தோறும் அன்பு காட்டுவதில் முதிர்ச்சியடைகிறாள். பருவத்திற்குரிய அன்பையும் தியாகத்தையும் அள்ளிச் சொரிகிறாள். சுருக்கமாகக் கூறப்போனால், அன்புப் பாடம் கற்றுக் கொடுக்கும் தலையாய ஆசிரியர் குலமே பெண்குலம்தான்.

அருள் நெறியின் இரண்டாவது ஒழுக்கம் அறநெறி நிற்றல், அறத்தின் பாற்பட்ட ஒழுக்கக் கூறுகள் பற்பல. எனினும் பிறருக்கு உதவி செய்தலும், அங்ஙனம் உதவி செய்யும் ஆற்றல் கைகூடாதபோது துன்பம்-கெடுதல் செய்யா திருத்தலுமே சிறந்த அறப் பண்பு. மனித குலத்தில் வளர்த்தால் சட்டங்களும் திட்டங்களும் இல்லாமலே சோஷலிசச் சமுதாய அமைப்பை நாம் கண்டுவிட முடியும். இத்தகு அரிய பண்பைப் பெண்குலம் இயல்பாகவே பெற்றிருத்தல் பாராட்டுதலுக்குரியது. ஒரு பெண் தாய்மையை அடைகின்றபோது அவள் செய்யும் தியாகத்திற்கு ஒப்பான ஒரு தியாகத்தைக் காட்டமுடியுமா? அவள் தன் செங்குருதியையே பாலாக மாற்றிக் குழந்தைக்கு ஊட்டி வளர்ப்பது எவ்வளவு கருணை!

இதனாலன்றோ நமது மாணிக்கவாசகர் இறைவனைப் பாராட்டும்போது, ‘தாயாய் முலையைத் தருவானை’ என்று குறிப்பிடுகின்றார். அது மட்டுமா? குழந்தையின் நோய்க்குத் தான் மருந்துண்டு பத்தியங்காக்கும் பண்பும் தாய்மையி லிடத்திலேயே உண்டு. இத்தகு சிறந்த இயல்புகளை மற்றவர்களுக்கும் அவர்கள் கற்றுக் கொடுப்பார்களானால் வையகம் முழுவதும் வெய்துயர் நீங்கி வானுற ஓங்கும்.

அருள் நெறியின் மூன்றாவது ஒழுக்கம் இறைவழிபாட்டு நெறி. நமது உடலுக்குத் தேவை இறைவழிபாடு.

கு.XII.28.