பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/454

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இரைப்பைக்குத் தேவை சோறு-அகப்பைக்குத் தேவை அருளியல் சிந்தனை.

பெண்களிடத்தில் இயல்பாகவே, கடவுள் வழிபாட்டுணர்ச்சி மிகுந்திருக்கிறது. அதன் காரணமாகவே, அவர்களிடத்து நில்லியல்புகள் பெருகிக் காணப்பெறுகின்றன. சமய வரலாறுகளைப் பார்த்தாலும் ஆண்மக்கள் தடம்புரண்ட பல்வேறு செய்திகளைக் காண்கிறோம். ஆனால் பெண்களோ தாம் தடம் புரளாததோடு தடம் புரண்டவர்களையும் தகுதிப்படுத்தித் தரமுடையவர்களாக்கி அருள் நெறிக்கு ஆற்றுப் படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சிறப்பியல்புகளுக்குத் திலகவதியார், மங்கையார்க்கரசியார் வரலாறுகளை நாம் எடுத்துக் காட்டலாம். இத்தகு பெருமைக்குரிய பண்பியல்புகளைப் பண்புக் கூறுகளை இயல்பிலேயே பெற்றிருக்கிற பெண்மைக் குலம், தாய்க் குலம், சுழன்றடித்துவரும் புதுமைக் காற்றின் பேரால் தடம்புரளாமல் நிலைபெற்றிருப்பார்களானால் அருள் நெறி வளரும்! அவர்கள் மனித குலத்தை நேசிக்க-அன்பு செலுத்த நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்யும் நல்வாழ்க்கையை நமக்குக் காட்டவேண்டும். குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக விளங்கும் திருவருளை வாழ்த்த-இன்ப அன்பு கலந்த நல்வாழ்வு வாழ வழி நடத்திச் செல்ல வேண்டும்.