பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/466

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமூகவியல் விஞ்ஞானம் (Sociology) “மனிதன் ஒரு சமூகப் பிராணி” என்று கூறுகிறது. தனிமனிதன், மற்ற மனிதர்களுடன் சார்ந்த வாழத்தலைப்பட்டு, சமூக அமைப்பு உருவம் பெறுகிறது. சமூக அமைப்பு இயங்கத் திருக்கோயில் தேவைப்படுகிறது. இல்லை, அவசியமும் கூட! திருக்கோயில் சமூகத்தின் சின்னம். பழங்காலத்தில் திருக்கோயிலை மையமாகக் கொண்டே சமுதாயம் இயங்கியது. வளர்ந்தது! பழங்காலத்தில் திருக்கோயில்கள் குடிகளைத் தழுவி வளர்ந்தன. குடிகளும் கோயிலைத் தழுவி வளர்ந்தன. அதனால்தான் “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றனர்.

விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் கோபுரங்களைக் கொண்ட திருக்கோயில்கள் நிறைந்து புகழுடன் விளங்கும் நாடு, தமிழ்நாடு. திருக்கோயில் கோபுரம் உயரமானது. ஆம்! வாழ்க்கையின் இலட்சியமும் கோபுரம் போல் உயர்ந்ததாக இருக்கவேண்டும். சந்திரனைக் குறியிலக்காகக் கொண்டால் ஒரு விண்மீனையாவது அடித்து வீழ்த்தலாம். கவனத்தில் கொள்க. கோயிலின் மதிற்கவர்கள் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன. ஏன்? களவிலிருந்து காக்க அல்ல! தூசி, புழுதி இல்லாத காற்று கிடைப்பதற்காகத்தான்! புறத்தே உள்ள ஒலி அலைகளும் தாக்காமல் இருப்பதற்காகத்தான்! நாள்தோறும் ஒரு மணிநேரம் நல்ல காற்றைச் சுவாசிக்க ஒரு ஏற்பாடு! நாள்தோறும் ஒலி இரைச்சலிலிருந்து மீள ஒரு ஏற்பாடு!

உடல், உழைப்புக்காக உருவாகியது. உழைப்பு இல்லாத உடல், நோய்க்கு இரையாகும். திருக்கோயிலுக்குச் செல்லும் பழக்கத்தை மேற்கொண்டால் உடலுக்கு உழைப்புக்கிடைத்து விடும். பழங்காலத் திருக்கோயில்கள் நீண்டும் அகன்றும் உள்ள பிரகாரங்கள் உடையவை. மூன்று பிரகாரங்களையும் மூன்று தடவை வலம் வந்து கருவறையில் எழுந்தருளியுள்ள கடவுளை வழிபடச் செல்லவேண்டும். இங்கனம், மூன்று பிரகாரங்களையும் மூன்று தடவை வலம் வருவதால் சற்றேறக் குறைய மூன்று கிலோ மீட்டர் நடந்த பயன்-