பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/471

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புராணங்களைப் புதுப்பிப்போம்

459


நடத்தத் தூண்டி வழி நடத்துவதில் பெரியபுராணம் சிறந்து விளங்குகிறது.

பெரிய புராணத்தில் பாத்திரங்களாக வரும் அடியார்கள் அனைவரும் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்களே! நிகழ்ச்சிகளை, படிப்போர் உளம் கொளக் கூறுவதில், சில பல புனைந்துரைகள் இருக்கலாம். ஆயினும் நாயன்மார்கள் வாழ்க்கை, வரலாறு என்பதை மறுக்கவும் இயலாது; மறக்கவும் கூடாது. பெரியபுராண அடியார்களிடம் குறிக்கோள் இருந்தது. அக்குறிகோளுக்காக உழைத்தார்கள். உறுதியுடன் உழைத்தார்கள், ஓயாது உழைத்தார்கள். அதனால் வெற்றியும் பெற்றார்கள். கடவுட் காட்சியும் அவர்களுக்குக் கிடைத்தது.

இன்று நம்மனோரிடம் அவர்கள்பால் இருந்த குறிக்கோள் சார்ந்த வாழ்க்கையும் இல்லை; உறுதியும் இல்லை; உழைப்பும் கிடையாது. அதனால், அந்த அடியார்களுடைய வாழ்க்கை நமக்கு அருமையானதாக - எட்டாக் கனியாகத் தெரிகிறது. நாம் அந்த வரலாறுகளைப் படிப்பதோடு சரி! அந்த அடியார்களுடைய வாழ்க்கையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்திட - பணி செய்திட விரும்பி முயன்றால் நம்முடைய வாழ்க்கையில் பல அரிய பணிகள் செய்யலாம். அப்படி யாரும் முயற்சி செய்யாமையினால் புாரணங்கள் - கதை, கற்பனை, பொய், அவசியமில்லாதவை என்று சொல்லும் அளவுக்குச் சிலர் வந்துவிட்டனர். நாம் மீண்டும் புராணங்களைப் புதுப்பிக்க வேண்டும், அடியார்கள் செய்த பணிகளை அவர்களுடைய அடிச்சுவட்டில் செய்ய வேண்டும். அடியார்கள் இந்த மண்ணகம் சிறப்புறச் செய்து காட்டிய பணிகளைச் செய்யவேண்டும்.

சேக்கிழார் பெரியபுராணத்தில் வரும் பணிகளைச் செய்தால் நல்ல வீடுகள் விளங்கித் தோன்றும் பலரும் ஒத்திசைந்து வாழும் சமுதாய அமைப்புத் தோன்றும்;