பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/472

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேற்றுமைகள் குறையும். அன்பின்வழி உறவுமலரும்; ஒப்புரவு நெறி கால்கொள்ளும்; இந்த மண்ணகம் விண்ணகமாகும்.

நமது முன்னோர் சிறந்த முறையில் சமுதாய அமைப்பைக் கண்டு வளர்த்தனர். பாதுகாத்தனர். ஊர் என்ற அமைப்பு அழகுற அமைந்தது. நடுவூரில் திருக்கோயில்! திருக்கோயில்கள் எடுப்பதற்கு முன்பு திருக்குளங்கள் அமைந்தார்கள். திருக்குளங்கள் திருக்கோயிலுக்குச்செல்வோர் துய்மை செய்து கொள்ளப் பயன்பட்டன. அந்த ஊரில் நிலத்தடி நீரைப் பராமரித்துக் கொள்ளவும் துணைபுரிந்தன. இயற்கை வளத்தையும் சூழ்நிலையையும் திருக்குளங்கள் பராமரித்தன. திருக்குளம் அமைத்த பிறகு தல விருட்சங்கள் நட்டனர். தல விருட்சங்கள் ஒன்றல்ல; இரண்டல்ல. காடு களைப்போல வைத்து வளர்ந்தனர். அரசவனம், கடம்பவனம் என்ற வழக்குகளை உற்று நோக்குக. திருக்குளம் அமைத்துத் தல விருட்சங்கள் வைத்த பிறகுதான் திருக்கோயில் எடுத்தனர். திருக்கோயில் பலரும் வழிபடும் திருத்தலம். திருக்கோயில்கள் கடவுளை எழுந்தருளச் செய்வதற்காக மட்டும் தோன்றியவையல்ல திருக்கோயில் கடவுள் தலைமையில் சமுதாயம் கூடி வழிபாடு நிகழ்த்துவதுடன் நட்பில் கலந்து பேசி மகிழ்ந்து உறவாட வேண்டும் என்பதும் குறிக்கோள்.

தமிழ்நாட்டில் திருவாரூர் ஒரு பெரிய திருத்தலம். இத்திருத்தலத்தின் பழைமை குறித்து அப்பரடிகள் “முன்னோ? பின்னோ?” என்று ஒரு பதிகம் அருளிச் செய்துள்ளார். அப்பதிகத்தில் கடையூழிக் காலத்தில் ஒருவனாக நின்றது முன்னோ அல்லது பின்னோ? திருவாரூரைத் திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளியது முன்னோ அல்லது பின்னோ? மாதொருபாகன் ஆனது முன்னோ அல்லது பின்னோ? என்று வினா - விடையாகப் பாடியுள்ளார். சுத்தரமூர்த்தி நாயனாருடைய வாழ்க்கை வரலாறு திருவாரூரை மையமாகக் கொண்டே இயங்கியது.