பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/473

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புராணங்களைப் புதுப்பிப்போம்

461


திருவாரூர் வீதிகள் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற சிவபெருமானின் திருவடிப் போதுகள் தோய்ந்த பெருமை யுடையவை. திருவாரூர் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற திருத்தலம். அறுபத்து மூவரில் திருவாரூரை இடமாகக் கொண்டவர்கள் பலர்.

திருவாரூர் பசுவின் கன்றுக்காகத் தன் மகன் மீது தேரூரச் செய்து நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஆண்ட ஊர். திருவாரூர் தண்டியடிகள், நமிநந்தியடிகள், விறன் மிண்டநாயனார், செருத்துணை நாயனார், சுழற்சிங்க நாயனார் இருந்து இன்ப அன்பு நிலை பொருந்தி இருந்த ஊர். நமிநந்தியடிகள் வரலாற்றினால்தான் இறைவன் “திருவாரூப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று சுந்தரரைச் சொல்ல வைத்தார். உயர் சைவ நெறியுடன் “தாழ்வெனும் தன்மையை” உலகிற்கு - நம்பியாரூரர் மூலம் உணர்த்திய பெருமை திருவாரூருக்கே உண்டு. சேக்கிழார் இயற்றியருளிய பெரிரயபுராணத்திற்கு முதல் நூலாகிய திருத்தொண்டத் தொகையை நம்பியாரூரர் திருவாரூரில் தான் பாடியருளினார். திருவாரூரின் பங்குனித் திருவிழா, திருமுறைகளின் சிறப்பாக இடம் பெற்ற திருவிழா! இங்ஙனம் பல்வேறு சிறப்புக்களையுடையது திருவாரூர்.

திருவாரூரிடையே திரு ஆரூர் அறநெறி என்று ஒரு சந்நிதி. திரு ஆரூர் மூலத்தானத் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்திலேயே திரு ஆரூர் அறநெறி இருக்கிறது. இந்தச் சந்நிதியில்தான் புகழ்மிக்க நமிநந்தி அடிகள் நீரினால் திருவிளக்கேற்றினார். மேலும் பரவையுண் மண்டளி என்ற திருக்கோயிலும் இங்கு இருக்கிறது.

திருவாரூர்த் தேர் அழகானது. திருவாரூர்த் தேரோட்டம் புகழ்பெற்றது. திருவாரூர்த் திருக்குளம் 18 ஏக்கர் - 22367 ச.அடி பரப்பளவுடைய மிகப் பெரிய திருக்குளம்.