பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/478

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முறைகளும், நாலாயிர திவ்வியப்பிரபந்தமுமாகும். இங்ஙனம் வரையறை செய்யப்பெற்றுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அதற்குப் பிறகு அற்புதமான பல நூல்கள் தோன்றியுள்ளன. ஆயினும் பதின்மூன்றாவது திருமுறை என்று வரிசைப்படுத்தவும், ஐயாயிர திவ்வியப் பிரபந்தம் என்று வரிசைப்படுத்தவும் எவருக்கும் துணிவில்லை. காரணம் மரபில் இருந்த பிடிப்பேயாகும். “முன்னோர் சொல்லைப் பொன்னேடோல் காத்தல்” என்பது பொருள் சார்ந்த ஒழுக்கமாகும். ஆதலால், நமது திருக்கோயில்கள் காலத்தால் பழைமையானவே. காலந்தோறும் நமது சமூக முன்னேற்றத்திற்கும் ஒருமைப்பாட்டு நலத்திற்கும் துணை நின்றவை; துணை நிற்பவை. நமது சமூக நாகரிகம், நமது திருக்கோயில்களைச் சார்ந்தே வளர்ந்தன; வளர்ந்து கொண்டிருந்தன. இந்த மரபு வழி நிற்றல் என்ற நெறி நமது சமூகத்திற்குத் தேவை.

அலைகள் வேகமாக அடிக்கும்பொழுது கப்பலுக்கு நங்கூரம் அவசியம் தேவை. நாளும் நமது நாட்டில் பல்வேறு இயக்கங்கள், சிந்தனை அலைகள், இயக்க அலைகள் மோதுகின்றன. இந்தச் சூழ்நிலையில் நமது சமய வழிப்பட்ட சமூகத்திற்கு மரபு என்ற நங்கூரம் அவசியமானது. இந்த நங்கூரத்தில் நமது சமூகம் நின்று - திருக்கோயில்களைச் சார்ந்து, குடிகளும், குடிகளைச் சார்ந்து கோயில்களும் வாழ்ந்து நமது நாகரிகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமது வழிபடும் தெய்வமாகிய கடவுள் கூட மரபுகளை அரண் செய்தே தமது திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். நம்பியாரூரக்கும் சிவபெருமானுக்கும் இடையில் ஏற்பட்ட வழக்கைத் திருவெண்ணெய்நல்லூர்த் திருக்கோயிலில் இருந்த சபையே, கேட்டுத் தீர்ப்பளித்தது. நமது சமூகத்தின் மையம் திருக்கோயில், நமது சமூகத்தின் மேலாண்மை திருக்கோயில், திருக்கோயில் மரபுகள் வழிவழியாகப் பின்பற்றக்கூடியவை. இந்த மரபுகளை மீறி நடப்பது