பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/486

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தட்டிப் போய்விட்டனரா? இன்று மனித வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டுவிட்டது. உலகம் விரைந்து மாறி முன்னேறிவருகிறது. மதங்கள் தோன்றிய காலத்திலிருந்த பிரச்சனைகள் வேறு; இன்றைய பிரச்சனைகள் வேறு. புரிந்து கொள்ள மதங்கள் முன்வரவில்லையா? அல்லது முடியவில்லையா? மனித உலகம் புதிய காற்றைச் சுவாசிப்பதில் மதம் தடையாக இருக்க விரும்புகின்றதா? இந்த உலகத்தின் நடப்பியல்புகளைப் புரிந்து கொண்டு உலகம் அழியாமல் - மனிதப்பூண்டு அழிந்து ஒழியாமல் நிலைநிறுத்தக்கூடிய மதமே இன்று வேண்டும்.

இன்று என்ன தேவை? இலட்சிய சமுதாயம் தேவை. மாந்தருக்கு இலட்சியத்தை எடுத்துக் கொடுத்து வழிநடத்திச் செல்லுகின்ற மதமே இன்று தேவை. இன்று மதம் தத்துவங்கள் பற்றி விவாதிக்காதீர்கள். மதங்கள் விவாதங்களைக் கடந்தவை. மதங்கள் அனுபவத்திற்கும் செயலுக்கு மட்டுமே உரியவை. இவர் தேவர்! அவர் தேவர் என்று வழக்காடுவதும் மதங்களுக்கிடையில் உயர்வு-தாழ்வு கற்பிப்பதும் ஒன்றுக்கும் உதவாத வேலை. பயனற்றது மட்டுமல்ல. அசோகர் ஸ்தூபியில் செதுக்கிவைத்த வாக்கியத்தை நினைவு கூர்க. “மற்றவர் மதங்களைக் கண்டிக்காதே” என்பதே அந்த மகாவாக்கியம்.

மனித உலகத்திற்கு அன்பையே போதிக்கும் மதமே நமக்குத் தேவை! உலகம் ஒரு குடும்பம் என்று அணைக்கும் மதமே இன்று தேவை. கடவுளை நம்புவோம்! மனிதகுலத்திற்குத் தொழும்பாய்த் தொண்டு செய்வோம்! எந்த விலை கொடுத்தும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் காப்போம்!

இந்த உயரிய நோக்கங்களுடன் திருவருள் பேரவை இயங்குகிறது. திருவருள் பேரவையின் பணி இன்றைய இந்தியாவிற்குத் தேவை! அனைவரும் சேர்ந்து ஆக்கம் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லா உலகமும் ஆனாய் நீயே.