பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/488

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மற்றொன்று மதம். ஆனால், இப்போது இரண்டுமே பலவீனமடைந்துவிட்டன. மதம், அனுட்டிப்போராலும் முறையாக அனுட்டிக்கப்படுவதில்லை. தனக்கு மக்களிடத்தில் உள்ள பிடிப்பை - சக்தியை இழந்துகொண்டு வருகின்றது. இந்த இழப்பு உள்ளிட்டழிவாகும். வெளிப் பார்வையில் மதம் செழித்து வளர்வது போலத்தான் தெரிகிறது. பல ஆலயங்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெறுகின்றன. நாளும் புதிய புதிய கோயில்கள் தோன்றுகின்றன. ஏன்? நாளும் புதுப்புது சாமியார்களும் தோன்றுகின்றனர். கிரிமினல் வழக்குகளும் வளர்கின்றன. மதத்தை எதிர்ப்போர் மதத்தின் உள்ளடக்கத்தைக் காணத் தவறுகின்றனர். அதனால் எதிர்த்து அழிக்க முற்படுகின்றனர்.

ஆயினும் மதத்தின் குறிக்கோள்கள் வளராது போனாலும் எப்படியோ மதம் வளர்கிறது. ஆண்டு தோறும் பல்லாயிரம் கணக்கானவர்கள் ஐயப்பன் மலைக்குப் போகின்றனர்; பழநிக்குப் பாதயாத்திரை போகின்றனர். மதம் சடங்காக உடலோடு கூடிய பழக்கமாக வளர்ந்து நிற்கும் நிலையில் பொய்மையானவை அழிக்கப்படவும் இல்லை; திருத்தப்படவும் இல்லை. உண்மையை - மத நெறியைக் காணும் முயற்சியும் காணப்படவில்லை. உண்மையான மதத்திற்கு நேர் எதிராக வெகுதூரம் விலகிப்போன நிலையில் சான்றோர்கள் ஆன்மிகம் என்ற சொல்லைக் கண்டனர்.

ஆன்மிகம் என்ற சொல் காரல்மார்க்ஸ், லெனின் சித்தாந்தங்களிலும் கூடப் பயன்படும் ஒரு சொல். ஆன்மிகம் என்பது ஆன்மாவின் - உயிரின் தரத்தை வளர்த்துக் கொள்ளுதல். நான், உள்ளம், ஞானம் என்ற மூன்றும் இணைந்து வளர்ந்த ஒன்றே ஆன்மிகம்.

உயிர் இயங்கவேண்டும். இயங்கிக்கொண்டேயிருக்க வேண்டும். ஓர் உயிர் இயங்கினால்தான் பெரும் பேறடைய “மடியும் மனித உடலுக்குள் உள்ள உயிர் அல்லது ஆத்மா