பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/506

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லையென்பது லெனினியத்தின் கோட்பாடு. ஆனால் தமிழ்மரபு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் என்ற தனிப்பொருளை ஒத்துக் கொண்டே வந்திருக்கின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய திருவள்ளுவர் உடம்பும் உயிரும் வெவ்வேறானவை என்றே குறிப்பிடுகிறார். காதலன் - காதலி இடையே இருக்கும் உறவுக்கு உவமை கூறவந்த திருவள்ளுவர் உடம்பொடு உயிரிடை நட்டை உவமை காட்டினார்.

“உடம்போ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையோ டெம்மிடை நட்பு”

என்பது குறள், காதலன் - காதலி இவ்விருவரிடையே ஏற்படுகிற உறவுக்கு, உடம்புக்கும் உயிருக்கும் இருக்கும் நட்பை உவமையாகக் காட்டினார். இதிலிருந்து உடலும், உயிரும் வெவ்வேறு என்பது தெளிவாகிறது. அது போலவே,

“குடம்பை தனித்தொழியப் புட்பறத் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு”

என்ற திருக்குறளும் உடம்பையும் உயிரையும் வேறு வேறாகக் காட்டுகிறது. ஆதலால் உடம்பே உயிரல்ல; உடம்பின் இயங்கு சக்தியும் உயிரல்ல. உடம்பில் தங்கியிருந்து பணிகளைச் செய்வது உயிர்.

உயிர்கள் நிலை பெற்றவை. உயிர்களுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. உயிர்களைக் கடவுள் படைக்கவும் இல்லை. உயிர்கள் என்றும் நிலைபேறான தன்மையுடையன என்பது தெளிவாகிறது. புறநானூற்றுக் கவிஞர்,

“மன்னா வுலகத்து மன்னுயிர்”

என்று பாராட்டுகிறார். திருவள்ளுவரும்,

“மன்னுயி ரோம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை”
.