பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூத்தும் இசையும் முதிர்ந்த இயற்றமிழாகும். இயற்றமிழ், கலை நிறைந்த வடிவத்தில் உணர்வைத் தொடுவது; செழுமைப்படுத்துவது. இயற்றமிழ் இதயத்திற்கு இதமளிப்பது களிப்புத் தருவது. இயற்றமிழே முக்கள் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக விளங்குவது. அதனால் இயற்றமிழ் விரித்துரைக்கும் நிகழ்வுகள் திருக்கோயில்தோறும் நிகழ்ந்துள்ளன; ஆங்கு பட்டிமண்டபங்கள் நடந்துள்ளன. இறைவனும் இறைவியும் இயற்றமிழ் ஆராயும் தமிழ்ச் சங்கங்களில் வந்தமர்ந்தனர்; தமிழை ஆய்ந்தனர்; இறைவன் “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறினான்” பாடலும் இயற்றினான். இறைவன், நாட்டு மக்களின் வாழ்க்கை நயந்தினிது நடைபெற அகப்பொருள் இலக்கணமும் அருளிச் செய்தனன். எனவே, இயற்கையோடிசைந்தது வாழ்க்கை வாழ்க்கையோடு இசைந்தது சமயம். சமயமும் கலையும் ஒன்றையொன்று தழுவியன. எல்லாம் மானுட குலத்தை வளப்படுத்தவேயாம்.

சமய வாழ்க்கையின் மணிமுடியான நிலை உள்ளக் கிழியில் உருவெழுதுதல்; உற்று நோக்குதல்.

“உயிரா வணமிருந்து உற்றுநோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி
உயிராவணம் செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர் நா டாளாதே ஆரு ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே!”

என்றருளிச் செய்வார், அப்பரடிகள். ஞானக் காட்சியில் ஒன்றைக் காணுதல் அரிய தவத்தின் பயன். அங்ஙனம் கண்ட ஒன்றினைத் தொடர்ந்து நினைந்து நினைந்து மகிழ, உள்ளக் கிழியில் உருவெழுதுதல் சமயக் கலையின் - ஓவியக் கலையின் - சிற்பக் கலையின் தாய்மை நிலை. ஓர் உருவமும்