பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

65


ஒரு நாமமும் இல்லாதானை, உணர்வரிய மெய்ஞ்ஞானத்தில் கண்ட காட்சியே முதல்! அக்காட்சியின் அனுபவமே வழிபாடு! வழிபாட்டினை அனைவரும் அனுபவித்து மகிழவே சிற்பம், திருவுருவ வழிபாடு! மலையெல்லாம் குகை குகையெல்லாம் திருக்கோயில்! மனம், வாக்குக் கடந்த பரம்பொருள், பேசும் பொற் சித்திரமாக, அருளும் திருமேனியாக எழுந்தருளியுள்ள காட்சி! தமிழகத்தில் உள்ள கோயில்கள் சிற்பக் களஞ்சியங்கள்! கல்லுக்கு உயிர் கொடுத்துப் பேசவைக்கும் கலையில் தமிழகச் சிற்பக் கலைஞர்கள் விஞ்சிய புகழுடையவர்கள். ஊழி தோறும் சாதாரண மக்கள் கூடக் கடவுளைக் கண்டு மகிழத்தக்க வகையில் சிற்பத்தில் சிந்தைக்கினிய மாட்சிமையைத் தந்தமைக்குக் கைம்மாறு ஏது? தமிழகத் திருக்கோயில்கள் இயல்பான - வாழ்க்கையோடியைந்த அனைத்து உணர்வுகளும் ததும்பும் சிற்பங்களைக் கொண்டு அழகுற விளங்குகின்றன. தமிழகத் திருக்கோயில்களின் சிற்பங்கள் கண்ணுக்கு விருந்து அளிப்பன; சிந்தைக்குக் களிப்பு நல்குவன: எண்ணுதற்குக் கற்பனைக் களஞ்சியமாய் விளங்குவன: இதனினும் உயிர்ப்புள்ள கலை வேறு ஏது?

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 80 காரணங்களைச் சிவன் அபிநயித்துக் காட்டுவதாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பரதமுனி இயற்றிய நாட்டிய நூலில் கண்டுள்ள காரணங்களோடு இவை ஒத்திருக்கின்றன.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போலவே - ஆனால், தந்தை, மகன் என்ற மரபுக்கேற்ப, உயரத்திலும் அளவிலும் சற்றுச் சிறியதாகக் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் கட்டப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள சிற்பங்களும் உயர்ந்து விளங்குபவை. இங்குள்ள சிற்பங்கள் உயிர்ப்புள்ள உருவங்களாக - நம்முடன் பேசுவன போன்று அமைந்துள்ளவை. கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் இறைவன், சண்டேசுவர நாயனாருக்கு