பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


- கசப்பான உண்மை. இந்த நிலை மாறினால் தமிழகம் புத்துயிர் பெறும்; புதிய வரலாறு படைக்கும்; கலைகளும் செழித்து வளரும்.

தாயாகிக் குழந்தை வளர்த்தல் ஒரு நுண்ணிய கலை. இன்று தாயார் பலர் குழந்தைகளை முறையாக வளர்ப்பதில்லை. ஒரு தாய் எங்ஙனம் பாலூட்டி, எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குச் சீர்காழியில் எழுந்தருளியுள்ள திருநிலைநாயகி ஓர் எடுத்துக்காட்டாவாள். குழந்தை அழுகிறது. அவள் தாய்! நான்கு சுவர்களுக்கிடையில் இருக்கும் தாயல்லள் ! அண்டத்திற்கு எல்லாம் தாய் ! அதனால் யாருடைய குழந்தை, எந்தக் குழந்தை என்ற வினாவிற்கு இடமில்லை. பிறந்த குழந்தைகளெல்லாம் பாலுண்டு வளர வேண்டுமல்லவா? அவள் அருளின் வடிவு! ஆதலால் பாலூட்டுகிறாள். சாதாரணமாகப் பாலூட்டினால் குழந்தையின் ஊனுடல் வளரும்; உயிர் வளராது. ஆதலால், திருஞானத்தையும் பாலிற்குழைத்தூட்டினாள்! இது தாய்க் குலத்திற்கோர் எடுத்துக்காட்டு அவர்கள் முறையாகக் குழந்தைகளை வளர்க்கவேண்டும்; பாலூட்டி வளர்க்க வேண்டும். உடன் சிறந்த அறிவையும் தந்து வளர்க்க வேண்டும். தாய்மைக் கலைப் பயிற்சிக் கூடம் சீகாழி. அதன் பேராசிரியை திருநிலை நாயகி, முதல்வர் பிரமபுரீச்சுரர்; அங்கு வளர்ந்த குழந்தை திருஞான சம்பந்தர். திருக்கோயில் வழங்கும் உயிர்ப்புள்ள வாழ்வியல் கலைக்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு வேண்டுமோ?

மானுட வாழ்க்கை அகனமர்ந்த காதலில் மலர்வது மகிழ்வது. இறைவனே உமையோடு காதல்புரிந்து பெண்பால் உகந்து வாழ்கின்றான்.

“தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி