பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முன்னின்றது. வழக்குகள் வாரா வாழ்க்கையே உத்தமமான வாழ்க்கை. ஆனால், வழக்குகள் வாரா வாழ்க்கை வையகத்தில் அமைவது அரிது. ஒரோவழி வாழ்க்கையில் வழக்குகள் வந்துற்றால் என்ன செய்வது? வழக்கைத் தாமே பேசிப் பேசி வழக்கைக் காழ்ப்பாக மாற்றக்கூடாது. உடனடியாக வழக்கை நடுவர் மன்றத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். இதுவே வழக்கு வளராமல் தடுக்கும் முறை வழக்கைப் பகையாக வளர்க்காமல் தடுத்து நிறுத்தும் உபாயம்! பண்டைய தமிழ் மக்களுக்கு முறை மன்றம் எங்கிருந்தது: திருக்கோயிலிலிருந்த ஊர்ச்சபைதான் முறை மன்றம். நற்றமிழ்ச் சுந்தரர் வழக்கு திருவெண்ணெய்நல்லூர்த் திருக்கோயிலில் இருந்த ஊர்ச் சபையிலேயே விசாரிக்கப் பெற்றது. ஆதலால், வழக்கை வளராது தடுத்து, உறவை வளர்க்கும் கலையும் திருக்கோயிலைச் சேர்ந்தே வளர்ந்தது.

வாழ்க்கையில் சிறப்புற்று விளங்க அடக்கம் தேவை. அடக்கத்துடன் வாழ்தல் ஒரு நுண்ணிய கலை. முற்றிய கதிர் மணிகள் தலை சாய்ந்து கிடக்கும். தாழ்வெனும் தன்மை பூண்டொழுகல் சைவத்தின் பண்பு. எந்தச் சூழ்நிலையிலும் அடக்கம் தவறுதல் கூடாது. சான்றோர்க்கு வணங்கி வாழ்தலைத் தவிர்க்கலாகாது. நற்றமிழ் நாவலூரர் திருவாரூரில், எந்தை ஈசனை வணங்கும் விரைவுணர்ச்சியில், தேவாசிரிய மண்டபத்தில் தங்கியிருந்த சிவனடியார்களை வணங்காமல் சென்று விடுகிறார். வணங்கக் கூடாது என்பது சுந்தரரின் எண்ணமன்று. பரபரப்பான விரைவு உணர்ச்சி! ஆனால், திருவாரூர்த் தியாகேசன் ஆரூரக்கு இதனை நயம்பட எடுத்து உணர்த்துகின்றார். அதன்பின் ஒரு தடவை வணங்க மறந்த ஆரூரர், பலதடவை “அடியேன், அடியேன்” என்று பன்னிப்பன்னிக்கூறி வணங்குகின்றார். வெற்றி பொருந்திய வாழ்க்கை அடக்கத்தில் பிறக்கிறது. புகழ் பொருந்திய வாழ்க்கை அடக்கத்தினாலேயே கிடைக்கும். அடக்கத்தோடு தொடர்பில்லாத புகழ், வெற்றி ஆகியன வெறும் ஆகாச வாணமேயாம். நிலைத்த பயன் தாரா.