பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

77


இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்கால வாழ்க்கை சிறந்து, கோபுரம் என உயரமுடியும். தமிழகத்தின் திருக்கோயில்கள் அடிப்பாகத்தில் அகன்றும், உயர உயர அகலம் குறைந்தும் இருப்பதைக் காண்க. அடிப்படையை அகலமாகப் போடுக! உம் வாழ்க்கை உயரும்!

இங்ஙனம் திருக்கோயிலின் உயரத்தை உயர்த்திக் கட்டும் முயற்சி, திருச்சி மாவட்டம் சீனிவாச நல்லூரிலுள்ள குரங்கநாதர் ஆலயத்தின் கட்டுமானத்திலேயே கால் கொண்டது. பின் முதலாம் இராசராசன் காலத்திலும் அதற்குப் பின்னும் இந்த முயற்சி பரவலாக வளர்ந்தது. முதலாம் இராசராசன் எடுத்த தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் மிகப் பெரிய திருக்கோயில். இத்திருக் கோயிலில்தான் ஒரே கல்லில் செய்யப்பெற்ற மிகப் பெரிய நந்தி இருக்கிறது. இத்திருக்கோயில் தோற்றத்தைத் தொடர்ந்து நான்கு திசைகளிலும் இராசகோபுரங்கள் கட்டும் புதிய முயற்சி மிகுந்தது.

பெரும்பான்மையான திருக்கோயில்கள் மூன்று சுற்றுக்களுடன் அமைந்தவை. இந்த மூன்று சுற்றும் மும்மூன்று முறை வலம் வந்தே வணங்க வேண்டும் என்பது வழிபாட்டு முறை. இங்ஙனம் மும்மூன்று சுற்று வலம் வரும் பொழுது ஏற்படும் உடற்பயிற்சி; மூச்சுப் பயிற்சி முதலியன உடல் நலத்திற்கு உரியன. திருக்கோயிலில் அமைத்து வணங்கும் திருவுருவங்கள் அனைத்தும் வாழ்வியற் கலையைச் சார்ந்த அறிவியலின் வெளிப்பாடேயாம். ஒவ்வொரு திருக்கோயில் கருவறையிலும் எழுந்தருளியிருப்பது சிவலிங்கத் திருமேனி. இதற்குப் பலவேறு பொருள் காணலாம். விரிவஞ்சி ஒன்றிரண்டு காட்டுகிறோம். உலகே இறைவன்; இறைவனே உலகு. இந்த உலகு உருண்டை என்பது பண்டைத் தமிழரின் தெளிவான முடிவு. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்ற அற நூல்கள் கூறும். உலகையே இறைவனாக நினைந்து வழிபடத் தொடங்கிய காலத்தில், உலக வடிவத்தில்