பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

81


வேறுபாடுகள் இருத்தல் இயற்கை. ஆதலால் முன் எழுந்த நூல்களினும் பின் எழுந்த நூல்களுக்கு அதிகச் சிறப்புக் கொடுத்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுதலே ஆய்வு மரபு.

இந்த அடிப்டையில் விழாத் திருக்கோயில் வழிபாட்டு அமைப்பினை ஆராய்ந்தால்1 கிறித்து பிறப்பதற்கு முன்பே தமிழர்களிடையில் திருக்கோயில் வழிபாடு இருந்ததாகத் தெரியவருகிறது.2 கடல் கொண்ட தென்குமரி நாட்டில் திருக் கோயில்கள் இருந்தன. இறைவன் மகேந்திர மலையிலிருநது ஆகமம் அருளிச் செய்ததாகத் திருவாசகமும் போற்றுகிறது3 மகேந்திரமலை குமரிக் கண்டத்திலிருந்ததேயாம்.4 இறைவன் மகேந்திர மலையில் அருளிச் செய்த ஆகமம் வழிவழி தமிழ் முனிவர்களால் வழக்கில் கொண்டு வரப்பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த ஆகமங்கள் சரிவரப் பேணி வைக்கப்பெறாமல் மறைந்து இருக்கின்றன. இன்றுள்ள ஆகமங்களில் சில, தமிழ் முனிவர்கள் செய்தவை என்ற கருத்தும் உண்டு. ஆகமத் தொடர்பான செய்திகள் விருப்பமும் வேட்கையுமுடையவர்க்கே புலப்பட வேண்டும் என்ற குறிப்பில், ஆரிய மொழியில் செய்து வைத்தனர் என்பர்5. இதற்கு அரண் பொதுவாக வடபுலத்து மக்களுக்கும், சமஸ்கிருதம் தங்களதென்றே போலி உரிமை கொண்டாடும் பார்ப்பனருக்கும் ஆகமங்கள் அறிமுகமும் தொடர்பும் இல்லை; இவர்கள் இன்றளவும் கூட ஆகம வழிபாடுகளுக்கு உடன்படுவதில்லை என்பதே உண்மை. இன்றுள்ள சம்ஸ்கிருத மறைகளில் “சிவமே கடவுள்” என்று தெளிவாக உறுதிப்படுத்தப் பெறவில்லை. மேலும் “சிவபெருமானுக்கு உரிய மொழி சம்ஸ்கிருதம், அதனால் சிவாகமங்கள் சம்ஸ்கிருத மொழியில் அருளிச் செய்யப்பெற்றன” - என்று கூறுவது பொருளற்றது.

இறைவன் ஒரு மொழிக்கேயுரியுவன் என்பது இறைவனுடைய குறைவிலா நிறைவுத் தன்மைக்குக் குறை கற்பிப்பதாகும். இறைவனுக்கு எல்லா மொழிகளும் உரிமையுடையன.