பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஈடுபட்டிருந்திருக்கின்றனர். ஈடுபட்டுள்ளனர், ஆயினும் உழைப்பும் உழைப்பாளியும் மதிக்கப்படாதிருந்த காலம் ஒன்று இருந்தது. இன்றும்கூட மனநிறைவு தரக்கூடியதாக இல்லை. உற்பத்தி செய்யும் தொழில் திறமையுடையவனின் உழைப்பாற்றல் விலைப் பண்டமாயிற்று. உற்பத்தி செய்பவன், கூலி வழங்குபவனின் பணத்தின் முன்னே கைகட்டி நின்றான்! மூலதனத் திரட்சிக்குக் காரணமாக இருந்த தொழிலாளர்கள் ஓய்வில்லாத வேலை, உத்தரவாதமில்லாத வாழ்வு, குறைந்த கூலி, போதிய வசதியின்மைகளில் அவதிப்பட்டனர். தொழிலாளர்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் 1886-ம் ஆண்டு மே முதல் நாளில் சிகாகோ நகரில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் விளைந்த தலையாய நன்மை, தொழிலாளர்கள் உலகம், நாடு - எல்லைகளைக் கடந்து ஒன்றுபட்டது. ஆம்! எல்லை, வேலி, சுவர் - இவை மனிதனின் படைப்பு! இயற்கையில் எல்லை இல்லை! தொழிலாளர்கள் உலக சகோதரர்களாக ஆனது, உலக வரலாற்றிலேயே மிகப்பெரும் சாதனையாகும். இந்தச் சாதனையின் விளைவாக 1889 மே முதல் நாள் முதல் ஒவ்வொரு மே மாதம் முதல் தேதியைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

இன்னமும் தொழிலாளர் வாழ்க்கை மேம்பாடுறுதல் வேண்டும். தொழிலாளர்களுடைய தொழில் திறன் நாளும் வளர் வாய்ப்புகள் வழங்கப்பெறுதல் வேண்டும். தொழிலாளர்களுக்குப் போதிய கல்வி வசதியும், சுகாதார மருத்துவ வசதிகளும் செய்து தரப்பெறுதல் வேண்டும். நாட்டளவில் சிறந்த தொழிலாளர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கவேண்டும். வேளாண்மைத் தொழிலாளர்களும், தொழிற்சாலைத் தொழிலாளர்களும் கூடித் தொழில் செய்து, நாட்டின் வளத்தைக் காப்பாற்ற வேண்டும் நாளும் உழைப்பின் தரம் தாழாமல் வளர்த்துக்